Published : 09 Aug 2024 10:31 PM
Last Updated : 09 Aug 2024 10:31 PM
இஸ்லாமாபாத்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு வாழ்த்து கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பகிர்ந்த பழைய புகைப்படம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்கான பாகிஸ்தானின் 40 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டினார் அர்ஷத் நதீம்.
அவர் பதக்கம் வென்ற சிறிது நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அர்ஷத் நதீமை வாழ்த்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், அவர் அர்ஷத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு அர்ஷத் நதீம் பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வைரலானதே இந்த கொந்தளிப்புக்கு காரணம். அந்த வீடியோவில், தான் 2015 முதல் ஒரே ஈட்டியை (Javelin) பயன்படுத்தி வருவதாகவும், தனக்கு புதிய ஈட்டி வாங்க பாக். அதிகாரிகள் உதவ வேண்டும் என்றும் அர்ஷத் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் பாக். பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பை கடுமையான விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். அர்ஷத்துக்கு வேண்டிய உதவியை செய்யாமல் அவர் வெற்றி பெற்ற பிறகு இப்படி பழைய புகைப்படத்தை பகிர்வது சரியா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன்னொருபுறம், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில், பாகிஸ்தானின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான ரானா மசூத், அர்ஷத்தின் வெற்றிக்கு பிரதமர் ஷெபாஸ் ஷரீபின் ஒத்துழைப்பே காரணம் என்று புகழ்ந்தது, நெட்டிசன்களின் கொந்தளிப்பை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு அர்ஷத் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து செலவைக் கூட பாகிஸ்தான் அரசு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT