Published : 09 Aug 2024 09:04 PM
Last Updated : 09 Aug 2024 09:04 PM

“வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர்” - சச்சின் டெண்டுல்கர் ஆதரவு

மும்பை: “தனது போட்டியாளர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டிய வினேஷ் போகத் நிச்சயம் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர். அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஒவ்வொரு விளையாட்டுக்கும் அதற்கான விதிகள் உள்ளன. அந்த விதிகளை அந்தந்த சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். சிலசமயங்களில் அதனை மறுபரிசீலனை கூட செய்யலாம். வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு நியாயமான முறையில் தகுதி பெற்றார். எடையின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்பான அவரது தகுதி நீக்கம் மற்றும் அவருக்குரிய நியாயமான வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது என்பது லாஜிக்கையும், விளையாட்டு உணர்வையும் மீறிய செயல்.

ஒரு தடகள வீரர் நெறிமுறைகளை மீறி விளையாட்டில் சிறந்து செயல்படுவதற்காக ஊக்க மருந்து போன்றவற்றை பயன்படுத்தினால் அவரை தகுதி நீக்கம் செய்வதை புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு எந்தப் பதக்கத்தையும் வழங்காமல் இருப்பதும் நியாயமானதுதான். வினேஷ் போகத்தை பொறுத்தவரை அவர், தனது போட்டியாளர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டினார். நிச்சயம் அவர் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர். விளையாட்டுக்கான நடுவர் மன்ற தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கிருக்கும் வேளையில், வினேஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பி பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆக.11) தீர்ப்பு அளிக்கப்படும் என்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x