Published : 09 Aug 2024 06:59 AM
Last Updated : 09 Aug 2024 06:59 AM
பாரிஸ்: விதிமீறல் செய்ததாக இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல் மற்றும் அவருடைய ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ்ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் நேற்று முன்தினம் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்டிம் பங்கல் பங்கேற்றார். இதில் அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்த போட்டி முடிவடைந்ததும் அன்டிம் பங்கல் ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்லாமல், தன்னுடைய பயிற்சியார்கள் பதகத் சிங், விகாஷ் ஆகியோர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுளார். இதன் பின்னர் அன்டிம் பங்கல் தனக்குமட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பி தனதுஉடைமைகளை எடுத்துவரக்கூறியுள்ளார்.
அங்கு அவர், சென்ற போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிடிபட்டார். ஆள்மாறாட்டம் செய்ததையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அன்டிம் பங்கலும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க அன்டிம்பங்கலின் பயிற்சியாளர்களானபகத், விகாஷ் ஆகியோர்காரில் மதுபோதையுடன் பயணித்து ஓட்டுநருக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த மறுத்து தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒட்டுநர் அளித்த புகாரின் பேரில், பயிற்சியாளர்கள் இருவரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஒலிம்பிக் விதிகளை மீறியதாக அன்டிம்பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT