Published : 08 Aug 2024 05:10 PM
Last Updated : 08 Aug 2024 05:10 PM

பேட்டிங்கில் தடுமாறினாலும் காழ்ப்பைக் காட்டும் கோலி - இலங்கை வெற்றியால் ஆடிப்போன இந்திய அணி!

இந்தியா - இலங்கை 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் விராட் கோலி

27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருக்கிறது இலங்கை. இந்திய அணி இந்தத் தொடரை இழந்ததனால் ரொம்பவும் ஆடிப்போய் உள்ளனர். தோல்வி மீதான வெறுப்பும் கோபமும் கோலியிடமிருந்தும், அவர் தூண்டுதலினால் சிராஜிடமிருந்தும் ஆவேசமாக இலங்கை அணி வீரர்கள் மீது செலுத்தப்பட்டது புதன்கிழமை நடைபெற்ற போட்டியைப் பார்த்தவர்களுக்கு வெளிப்படை.

மூன்று போட்டிகளிலும் இந்திய அணி இலங்கை ஸ்பின்னர்களிடம் 27 விக்கெட்டுகளைக் கொடுத்து மடிந்தனர். ஸ்பின் என்றால் இந்தியாவிடம் பலிக்காது என்ற நிலை போய், இப்போது இத்தனை விக்கெட்டுகளை ஒரே தொடரில் ஸ்பின்னர்களிடம் பறிகொடுத்து இந்திய அணி தேவையில்லாத ஒரு சாதனையை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளது அல்லது இலங்கை அணி இந்திய அணியின் ‘சோ கால்டு சூப்பர் ஸ்டார்கள்’ மீது செலுத்தியுள்ளது எனலாம். பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் அணி ஒரே ஒருநாள் தொடரில் 21 விக்கெட்டுகளைக் கொடுத்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது வங்கதேசத்தை விடவும் தாழ்ந்துவிட்டது இந்திய ஒருநாள் அணி.

மேலும் இந்திய அணியின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக இந்தியாவுக்கு எதிராக 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஸ்பின்னர் ஆனார் துனித் வெல்லலகே. இதற்கு முன்னர் ஆஸி.யின் பிரெட் லீ 4 முறையும், பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத் 4 முறையும் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் 3 முறையும் மே.இ.தீவுகளின் மெர்வ் டில்லான் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இருமுறையும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.

இப்படி ஸ்பின்னர்களிடம் சொதப்பும் இந்திய பில்லியனர் பேட்டர்கள், இலங்கை வீரர்கள் மீது கோபத்தைக் காட்டுவது அசட்டுத்தனம் மற்றும் மூடத்தனம். சிராஜ் நேற்று (ஆக.7) செம சாத்து வாங்கினார். பொதுவாக சாத்து வாங்கும்போது எதிரணியிடம் கோபத்தைக் காட்டுவது வழக்கமல்ல. சிராஜ் 9 ஓவர் 78 ரன்களை வாரி வழங்கினார். பந்துகள் ஸ்விங் ஆவேனா என்று படுத்தியது ஆசியக் கோப்பையில் 50 ரன்களுக்கும், சமீபமாக உலகக்கோப்பையில் 55 ரன்களுக்கும் இலங்கை செம உதை வாங்கியது இந்திய அணியிடம். அதற்குப் பழி தீர்த்து விட்டது என்றே கூற வேண்டும். ஆசியக் கோப்பையில் சிராஜ் தான் அவர்களை சிதைத்தவர்.

இந்த முறை அவர்கள் இவரைச் சிதைத்து விட்டனர். பொதுவாக சிராஜ் கோபம் காட்டுபவர் அல்ல. லேசாக முறைப்பார், விக்கெட் எடுத்தால் கொஞ்சம் அதிகம் கொண்டாடுவார். ஆனால் சமீபமாக பேட்டிங்கில் தொடர் சொதப்பலில் இருக்கும் கோலி, தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக நாடக பாணியில் ஓவர் ஆக்‌ஷன் செய்து கொண்டிருந்தார். சிராஜ் போன்றவர்களையும் இலங்கை வீரர்களுக்கு எதிராக தூண்டினார். தன் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதை விடுத்து மைதானத்தில் தன் சேட்டைகள் மூலம் இருப்புக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்வதை நம் ரசிக பெருமக்களில் சிலர் ‘ஸ்பிரிட்’, ‘நாட்டுப்பற்று’ என்று தப்பும் தவறுமாகப் புரிந்து வைத்துள்ளனர். அவரது ஆத்திரம் தன் இருப்பிற்கான ஜீவித நியாயத்தைக் கற்பிக்கும் ஒரு சுய-மோக, சுய-வெறியின் வெளிப்பாடு.

இந்திய அணியின் பலமே தோல்வியை தங்கள் மனதுக்குள் எடுத்துக் கொண்டு மீண்டெழுவதே. மைதானத்தில் வெற்றி பெறும் அணி மீது காழ்ப்பை உமிழ்வது அல்ல. அதுவும் 230 ரன்னைக் கடக்க முடியாமல் டை செய்தனர். பிறகு 240, 248 ரன்களை விரட்ட முடியாமல் படுதோல்வி அடைந்ததற்கு எதிரணியினர் மீது காழ்ப்பைக் காட்டுவது மிகவும் மோசமான விளையாட்டு வீரனுக்குரிய மன நிலையேயாகும். இந்திய அணிக்கு இது பொருந்தாத மனநிலை.

ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக இப்படி முந்தைய இந்திய அணிகள் சொதப்பிப் பார்த்ததில்லை. பவுலிங்கில் ஷிவம் துபேவுக்கு எல்லாம் ஓப்பனிங் ஓவர் கொடுத்தால் எப்படி விளங்கும்?. எவ்வளவோ பவுலர்கள் உள்ளனர். மோசின் கான் என்று ஒருவர் இருக்கிறார். உம்ரன் மாலிக்கை சுத்தமாக ஒழித்தாகிவிட்டது. அர்ஷ்தீப் சிங்கையே தொடர்ந்து அணியில் வைத்திருந்தால் என்ன?

கிரிக்கெட்டை பிசிசிஐ பணத்தால் கட்டிப்போட்டுள்ளதால் இந்திய அணியும் கிரிக்கெட்டையே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணத்தின் மீது, பார்வையின் மீதும் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்கள் மீதும் கடும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது இலங்கையின் இந்த அணி. கம்பீரா, ஜெயசூரியாவா என்று இந்தப் போட்டித் தொடர் விளம்பரப்படுத்தப்பட்டது. கடைசியில் ஜெயசூரியாதான் வென்றுள்ளார். இந்த தோல்வியினால் புதியப் பயிற்சியாளர் கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி கொஞ்சம் ஆடிப்போய்விட்டனர் என்றே கருத வேண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x