Published : 08 Aug 2024 08:59 AM
Last Updated : 08 Aug 2024 08:59 AM
வினேஷ் போகத் விவகாரத்தின் காயமும், வேதனையும் ஆறுவதற்குள் இன்னொரு இடி இந்திய மல்யுத்த வீராங்கனை மீது விழுந்துள்ளது. விதிமீறல் செய்ததாக மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அதன் பிறகுதான் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆண்டிம் பங்கல் தனக்கு மட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார். அவரை எச்சரிக்கை செய்து பிற்பாடு விட்டனர். இதனையடுத்து ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆண்டிம் பங்கல் மற்றும் மல்யுத்தக் குழு வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. ஆண்டிம் தன் சகோதரியிடம் தன் அடையாள அட்டையைக் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குச் சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்ததாக இவரை ஒலிம்பிக் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். பிற்பாடு விடுவித்தனர்.
இதோடு ஆண்டிம் பங்கல் தன் வாக்குமூலத்தை அளிக்கவும் போலீஸாரால் அழைக்கப்பட்டார். இது போதாதென ஆண்டிம் பங்கலின் சொந்த பயிற்சியாளர்கள் விகாஸ் மற்றும் பகத் காரில் மதுபோதையுடன் பயணித்து ஓட்டுநருக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த மறுத்து தகராறு செய்ததும் போலீஸ் பார்வைக்குச் சென்று இருவரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT