Published : 08 Aug 2024 04:14 AM
Last Updated : 08 Aug 2024 04:14 AM

வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் முதல் ஓய்வு அறிவிப்பு வரை - நடந்தது என்ன?

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்,நீர்ச்சத்து இழப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா சந்தித்து நலம் விசாரித்தார். படம்: ஏஎப்பி

பாரிஸ்: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் நொறுங்கச் செய்துள்ளது. இந்தப் பின்னணியில் வினேஷ் போகத் தனது ஓய்வையும் அறிவித்துள்ளார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத் (29). இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத்.இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் அரையிறுதிப் போட்டி முடிந்த பின்னர் வினேஷ் போகத் சுயமாகவே எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்றேஅதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார்.

விடிய விடிய போராடிய வினேஷ்: சைக்கிளிங் உட்பட பல்வேறு பயிற்சிகளையும் விடிய விடிய தூங்காமல் மேற்கொண்டுள்ளார். பயிற்சியாளர்களும் அவரை உத்வேகப்படுத்தி உடல் எடை குறைப்பு பயிற்சிக்கு உதவியுள்ளனர். கடினமான உடற்பயிற்சிக்கு பின்னரும் வினேஷ் போகத் எடை பரிசோதனையில் தேர்ச்சி அடையாததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையே, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ததால் அவரது உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளது. இதனால் சோர்வடைந்த அவர், உடனடியாக ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் ஆறுதல்: இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தனது எக்ஸ் வலைதள பதிவில், “தகுதி நீக்கத்தால் வினேஷ் போகத்தின் ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும் அவர், 140 கோடி மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். அவரது மன உறுதியும், மீளும் திறனும் இந்தியாவில் இருந்து உருவாகும் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘வினேஷ் போகத் நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமிதம். இந்த பின்னடைவு வலியை தருகிறது. நான்அனுபவிக்கும் விரக்தியின் உணர்வைவார்த்தைகளால் விவரிக்க முயற்சிக்கிறேன். அதேவேளையில், நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது. வலிமையுடன் மீண்டு வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வினேஷ் போகத்துக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் ஆராயுமாறும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்குமாறும் வலியுறுத்தினார்.

‘இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை எதிர்த்து போராடி, நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ்போகத் விட்டுக்கொடுப்பவர் அல்ல. அவர் மீண்டும் வலுவாக களத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பு: நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய துணிச்சல் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001-2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x