Published : 07 Aug 2024 08:19 PM
Last Updated : 07 Aug 2024 08:19 PM
சென்னை: “பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் 50 கிலோ எடைப் பிரிவிற்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில், இன்று காலை அவரது உடல் எடை குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக உள்ளதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.
பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாவண்ணம் வீரர்-வீராங்கனைகளுக்கான உடற்தகுதியை உரிய முறையில் கண்காணித்து உறுதிசெய்யுமாறு மத்திய அரசையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் வலியுறுத்துகிறேன். பதக்கங்கள் வரும் போகும்; நம் நாட்டின் வீரர்-வீராங்கனைகள் என்றைக்கும் நமக்கு தங்கங்கள் தான்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT