Published : 07 Aug 2024 07:25 PM
Last Updated : 07 Aug 2024 07:25 PM

வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்து பி.டி.உஷா ஆறுதல்

பாரிஸ்: நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் வினேஷ் போகத். அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகத் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்றே அதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகளில் விடிய விடிய தூங்காமல் ஈடுப்பட்டுள்ளார். இருப்பினும் இன்று அவருக்கு எடை பரிசோதனை செய்தபோது நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இரவு முழுவதும் தூங்காமல் பயிற்சி மேற்கொண்டதால் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாரிஸில் ஒரு பாலி கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய முக்கிய உறுப்புகள் எல்லாம் சீராக இயங்குகின்றன நீர்ச்சத்து குறைபாட்டுக்காக மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினேஷ் போகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷா கூறும்போது, “தகுதி நீக்கம் குறித்த செய்தியறிந்து ஏமாற்றமடைந்தேன். வினேஷ் போகத்துக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. எமோஷனலாகவும் அவருக்கு நாங்கள் உதவியாக இருக்கிறோம். இந்திய ஒலிம்பிக் சங்கம், தகுதி நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. போட்டித் தகுதியை பூர்த்தி செய்ய வினேஷ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் இரவு முழுவதும் மேற்கொண்ட உழைப்பை நான் அறிவேன்” என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon