Published : 07 Aug 2024 06:41 PM
Last Updated : 07 Aug 2024 06:41 PM
சென்னை: “பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் ஃபைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். தகுதி சோதனையில் நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகளின் போதும் முன்னும் பின்னும் எடை சரியாக இருந்திருக்கிறது. இன்று மட்டும் 100 கிராம் எடை கூடியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. பயிற்சியாளர் குறித்தும் இப்போட்டியில் அவர் சந்தேகம் எழுப்பி இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது குறித்து மக்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானது. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையைக்குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பசி, தூக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது எப்படி என தங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதைப் பிடிக்காதவர்கள் செய்த சதியாக இதைப் பார்ப்பதாகச் சொல்லியிருப்பதை எளிதில் புறந்தள்ள முடியாது.
வினேஷ் போகத்தின் கடந்த கால அரசியல் போராட்டங்களை மனதில் கொண்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நெறியாளர்கள், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற திறமைசாலிகள் ஒருகாலும் புறக்கணிக்கப்படக் கூடாது. வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டிருந்தாலும் மக்கள் மனங்களைவென்று இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை” என அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...