Published : 07 Aug 2024 01:34 PM
Last Updated : 07 Aug 2024 01:34 PM

“வினேஷ் போகத் நீங்கள் இந்தியாவின் பெருமை” - பிரதமர் மோடி ஆறுதல்

பிரதமர் மோடி - வினேஷ் போகத்

புது டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. அத்துடன் ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேகம் நீங்கள். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் மீண்டு வருவீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! உங்களுக்கு நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்த போட்டி 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரவு முழுவதும் இந்திய அணியினரின் கடுமையான பிரயத்தனங்களையும் தாண்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 50 கிலோவையும் தாண்டி எடை கொண்டிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக இப்போதைக்கு வேறு விவரங்கள் ஏதும் குழுவினரால் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம். இப்போதைக்கு இனி கையில் உள்ள போட்டிகளில் இந்திய குழு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x