Published : 07 Aug 2024 06:52 AM
Last Updated : 07 Aug 2024 06:52 AM

இறுதிக்கு முன்னேறிய நீர்ஜ் சோப்ரா முதல் கிரண் பஹல் ஏமாற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

நீரஜ் சோப்ரா

பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த சீசனில் அவரது சிறப்பான செயல் திறனாக இது அமைந்தது.

84 மீட்டர் தூரம் எறிந்தாலே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுவிடலாம். இதனால் 26 வயதான நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்றில்ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எந்த வாய்ப்பில் அதிக தூரம் வீசுகிறாரோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதேவேளையில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை (84 மீட்டர்) எட்டிவிட்டால் அதற்கு மேல் அந்த வீரர் தனது அடுத்த வாய்ப்புகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் அடிப்படையில் நீரஜ் சோப்ரா எஞ்சிய 2 வாய்ப்புகளிலும் பங்கேற்கவில்லை. நீரஜ் சோப்ராவின் அதிகபட்ச செயல் திறன் 89.94 ஆக இருக்கிறது. தற்போது அவர், ஒலிம்பிக் தகுதி சுற்றில் வீசிய தூரம் 2-வது சிறந்த செயல் திறனாக இருக்கிறது.

மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனா 80.70 மீட்டர் தூரம் எறிந்து ‘ஏ’ பிரிவில் 9-வது இடமும், ஒட்டுமொத்தமாக 18-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இரு பிரிவையும் சேர்த்து முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் கிஷோர் ஜெனா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 86.59 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டியில் நுழைந்தார்.கிரனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.63 மீட்டர் தூரம் எறிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர்களுடன் ‘பி’ பிரிவில் இருந்து பிரேசிலின் மவுரிசியோ டா சில்வா லூயிஸ் (85.91 மீட்டர்), மால்டோவாவின் அன்ட்ரியன் மார்டாரே (84.13), பின்லாந்தின் எடெலடலோ லஸ்ஸி (82.91) ஆகியோரும் இறுதி சுற்றில் கால்பதித்துள்ளனர்.

‘ஏ’ பிரிவில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.76 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதி சுற்றில் நுழைந்தார். கென்யாவின் ஜூலியன் யேகோ (85.97), செக்குடியரசின் ஜேக்கப் வட்லெஜ்ச் (85.63), பின்லாந்தின் டோனி கெரானென் (85.27), ஆலிவர் ஹெலன்டர் (83.81), டிரினிடாட் & டொபாகோவின் வால்காட் கேஷோர்ன் (83.02) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இறுதிப் போட்டி நாளை (8-ம் தேதி) இரவு 11.55 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய ஆடவர் அணி தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, சீனாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மானவ்தாக்கர், ஹர்மீத் தேசாய் ஜோடி 2-11, 3-11, 7-11 என்ற நேர் செட் கணக்கில் மா லாங், சுகின் வாங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. 2-வது நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சரத் கமல் 11-9, 7-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் ஃபேன் ஜென்டாங்கிடம் வீழ்ந்தார். 3-வதாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் மானவ் தாக்கர் 9-11, 6-11, 9-11 என்ற செட் கணக்கில் சுகின் வாங்கிடம் தோல்வி அடைந்தார்.

கிரண் பஹல் ஏமாற்றம்: மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கிரண் பஹல் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேற தவறிய நிலையில் நேற்று ரெப்பஜேஜ் சுற்றில் பங்கேற்றார். இதில் அவர், பந்தய தூரத்தை 52.59 விநாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இதில் முதலிடத்தை பிடித்திருந்தால் அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெற்றிருக்கலாம்.

இந்திய வீரர்கள் இன்று

மராத்தான் நடை பந்தயம் கலப்பு ரிலேவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, சுராஜ் பன்வார் பங்கேற்பு. நேரம்: பகல் 1:35

ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே பங்கேற்பு. நேரம்: பகல் 1:45

மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி பங்கேற்பு. நேரம்: பகல் 1:55

மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் அன்னு ராணி பங்கேற்பு. நேரம்: பகல் 1:55

மகளிருக்கான கோல்ஃப் விளையாட்டில் அதிதி அசோக், தீக் ஷா தாகர் பங்கேற்பு. நேரம்: பகல் 1:30

மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியா பங்கேற்பு. நேரம்: பகல் 1:30

மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு பங்கேற்பு. நேரம்: இரவு 11 மணி

மகளிருக்கான மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அன்டிம் பங்கல் பங்கேற்பு. நேரம்: பிற்கல் 2:30

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x