Published : 07 Aug 2024 12:00 AM
Last Updated : 07 Aug 2024 12:00 AM

வினேஷ் போகத்: வலிகளுடன் யுத்தம் செய்து தாயகத்துக்கு பெருமை சேர்த்த போராளி!

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் வினேஷ் போகத்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார்.

இந்த போராட்டத்தின் போது வீனேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் போலீஸாரால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். “இப்படிப்பட்ட நாள்களைப் பார்க்கவா பதக்கங்களை வென்றோம்?” என்று செய்தியாளர்களிடம் வினேஷ் போகத் கண்ணீர் மல்க கதறி அழுதபடி பேசிய வார்த்தைகள் கலங்க வைத்தது.

விரக்தியின் உச்சத்தில் மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்தார் வினேஷ். பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுக்கப்பட்ட அவர் இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார்.

இப்படியான சூழலில், கடந்த ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் எடையை குறைத்து நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை வினேஷ் போகத் வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

யு சுசாகி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தோல்வியையே பார்க்காதவர். அப்படிப்பட்ட ஒருவரை வீழ்த்தி வினேஷ் போகத் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

வினேஷ் போகத்தின் இந்த வெற்றிகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிலாகித்துள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “இன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வினேஷ் போகத், இந்தியாவின் பெண் சிங்கம். 4 முறை உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார்.

ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டார். தன்னுடைய நாட்டின் தெருக்களில் இழுத்து செல்லப்பட்டார். உலகையே வெல்ல போகும் இந்தப் பெண் இந்த நாட்டின் அமைப்பிடம் தோற்றார்” என்று வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

இப்படியான சூழலில், இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை.

முதல் மூன்று நிமிடங்களில் ஒரு பாயின்ட் ஸ்கோர் செய்த வினேஷ் போகத், அடுத்தடுத்த 5 பாயின்ட்களை குவித்தார். ஆட்டத்தில் இறுதியில் 5-0 என்ற கணக்கில் யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் வினேஷ் போகத்.

சொந்த நாட்டிலேயே பல இன்னல்களை சந்தித்தும், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தீவிர பயிற்சியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் வினேஷ் போகத்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x