Published : 06 Aug 2024 04:39 PM
Last Updated : 06 Aug 2024 04:39 PM

வினேஷ் போகத் அபாரம்: ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் உக்ரைன் வீராங்கனையை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

வினேஷ் போகத் போராட்டம்: காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார்.

“நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள்” என ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் எடையை குறைத்து 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார். அடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக அவர், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியபோது, தனது பயிற்சியாளர் வோலர் அகோஸைக் கட்டிப்பிடித்து, உணர்ச்சிபொங்க கண்ணீர் சிந்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x