Published : 06 Aug 2024 08:29 AM
Last Updated : 06 Aug 2024 08:29 AM

ஒலிம்பிக் ஹாக்கியில் சாதிக்குமா இந்தியா? - ஜெர்மனியுடன் இன்று அரையிறுதி!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. தொடர்ந்து கால் இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகித்த இங்கிலாந்து அணியை பெனால்டி ஷுட் அவுட்டில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 2-வது முறையாக இந்திய அணி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு முதன்முறையாக தங்கப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும். மேலும் இறுதிப் போட்டியில் நுழையும் பட்சத்தில் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்யும்.

கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தது. 17-வது நிமிடத்தில் டிபன்டரான அமித் ரோஹிதாஸுக்கு ரெட்கார்டு வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 43 நிமிடங்களிலும் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுத்தது.

இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில் பெனால்டி ஷுட் அவுட்டில் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அற்புதமாக செயல்பட்டதால் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

ஒரு வீரரை இழந்த போதிலும் துணிச்சலுடன் இந்திய அணி விளையாடிய விதம் பாராட்டும் வகையில் இருந்தது. ‘இந்திய ஹாக்கியின் பெருஞ்சுவர்’ என அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இதுவரை கோல்கம்பத்துக்கு முன்பாக ஒரு போர் வீரரை போன்று செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டு ஷாட்டை 10 முறையும், பெனால்டி கார்னரை 10 முறையும் தடுத்து அசத்தினார்.

ரெட்கார்டு காரணமாக இன்றைய ஆட்டத்திலும் அமித் ரோஹிதாஸ் களமிறங்க முடியாது. இதனால் இந்திய அணி அதற்கு தகுந்தவாறு களவியூகங்களை மாற்றி அமைக்கக்கூடும். 7 கோல்கள் அடித்துள்ள ஹர்மன்பிரீத் மீண்டும் ஒரு முறை அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டக்கூடும். உலக சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது.

தொடர்ந்து அணி கால் இறுதி சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியிருந்தது. உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனி, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

4 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள அந்த அணி இம்முறை பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஜெர்மனி அணிக்கு எதிரான 6 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி 5-ல் வெற்றி கண்டிருந்தது. மேலும் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x