Published : 05 Aug 2024 11:43 AM
Last Updated : 05 Aug 2024 11:43 AM

அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி முதல் லவ்லினா வெளியேற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. பெனல்டி ஷூட்-அவுட்டின்போது இந்திய அணியின் கோல்கீப்பர் ஜேஷ் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

பாரிஸ் நகரில் நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்தியா, கிரேட் பிரிட்டன் அணிகள் மோதின. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

கால் இறுதி என்பதால் ஆட்டத்தில் மிகவும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். பெனல்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் ஹர்மன்பிரீத். இதைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் வீரர் லீ மார்ட்டன் ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சம நிலையை ஏற்படுத்தினார்.

இதனிடையே இந்திய வீரர் அமித் ரோஹிதாஸுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்ட இறுதி வரை வேறு கோல்கள் விழாததால் 1-1 என்ற நிலையே நீடித்தது. இதைத் தொடர்ந்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்திய வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றினர். ஆனால் கிரேட் பிரிட்டன் வீரர்கள் 2 வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினர். இந்திய அணியின் கோல்கீப் பர் ஜேஷ் அபாரமாக 2 முறை பந்துகளைத் தடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. கடந்த 2021-ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அரை இறுதி வரை இந்திய அணி முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லவ்லினா வெளியேற்றம்: மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் லோவ்லினா, சீன வீராங்கனை லீ குயானுடன் மோதினார்.

இதில் சீன வீராங்கனை லீ குயான் 4-1 என்ற கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து குத்துச்சண்டைப் போட்டியின் 75 கிலோ பிரிவிலிருந்து லவ்லினா வெளியேறியுள்ளார்.

லக்‌ஷயா சென் ஏமாற்றம்: பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் லக்‌ஷயா சென், டென்மார்க் வீரரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.

இதில் விக்டர் அக்சல்சென் 22-20, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் தோல்வி கண்ட லக்‌ஷயா சென், இன்று நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதவுள்ளார்.

ஜெஸ்வின் ஆல்டிரின், பாருல் சவுத்ரி தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்டிரின், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீரர் பாருல் சவுத்ரி ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர். நேற்று நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் மகளிர் ஸ்டீபிள்சேஸ் ஹீட் பிரிவில் பாருல் சவுத்ரி 21-வது இடம் பிடித்தார்.

ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முதல் 2 முயற்சிகளில் ஜெஸ்வின் ஆல்டிரின் ஃபவுல் செய்தார். 3-வது முயற்சியில் அவர் 7.61 மீட்டர் நீளம் தாண்டினார். இதனால் அவர் குரூப் பி தகுதிச் சுற்றில் 13-வது இடத்தை பிடித்தார்.

பாய்மரப் படகுப் போட்டியில் மகளிர் டிங்கி பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் 24-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார். அதேபோல் ஆடவர் பாய்மரப் படகுப் போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 23-வது இடம்பிடித்து வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x