Published : 08 Aug 2014 11:57 AM
Last Updated : 08 Aug 2014 11:57 AM

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பலிக்கல் கோரிக்கை

இந்தியாவில் பெரிய அளவிலான தொழில்முறை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுவதில்லை. நாங்கள் பதக்கம் வென்றிருக்கும் இந்தத் தருணத்தில் உலகத் தரம் வாய்ந்த ஸ்குவாஷ் போட்டிகளை நடத்த முயற்சி எடுக்காவிட்டால், இனி எப்போதுமே அது சாத்தியமாகாது என தீபிகா பலிக்கல் தெரிவித்துள்ளார்.

1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்ட பிறகு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை (தங்கப் பதக்கத்தை) வென்று கொடுத்துள்ளது தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா-ஜோஷ்னா ஜோடி. இந்த நிலையில் தீபிகா கூறியிருப்பதாவது:

காமன்வெல்த் போட்டியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி (தங்கப் பதக்கம்) இந்திய ஸ்குவாஷின் தோற்றத்தை மாற்ற பயன்படும் என நம்புகிறேன். நாங்கள் (தீபிகா-ஜோஷ்னா) வென்றுள்ள தங்கப் பதக்கம் ஏராளமான சிறுவர் சிறுமியரை ஸ்குவாஷ் விளையாட தூண்டும் என நம்புகிறேன். ஸ்பான்சர்களும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பொருத்தமானதாக இருக்கும்.

இந்தத் தருணத்தில் உலகத் தரம் வாய்ந்த ஸ்குவாஷ் போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சி எடுக்காவிட்டால், இனி எப்போதுமே எடுக்க முடியாது என நினைக்கிறேன். காமன்வெல்த்தில் பதக்கம் வென்று நாடு திரும்பிய பிறகு ஏராளமானோர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு, ஸ்குவாஷ் விளையாட்டை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினர். அவர்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியை ரசித்துள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

இந்தியாவில் பெரிய அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறாதது வருத்தமளிக்கிறது. சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடுவது மிகப்பெரிய பெருமையாகும். ஆனால் தாய்நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாட முடியாததை அவமானமாகக் கருதுகிறேன் என்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக ஹாங்காங் ஓபன், சீன ஓபன் ஆகியவற்றில் விளையாடவுள்ள தீபிகா பலிக்கல், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான சாரா ஃபிட்ஸுடன் இணைந்து வரும் திங்கள்கிழமை முதல் சென்னையில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார். அது தொடர்பாக பேசிய தீபிகா, “அடுத்துவரக்கூடிய இரு வாரங்கள் சாரா என்னுடன் இருப்பது நல்ல விஷயம்.

அவராலும், அணியின் சகநண்பர்களாலும்தான் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது. அடுத்ததாக நான் விளையாடவுள்ள மிகப்பெரிய போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டி. அதில் சவால் இருக்கும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் மற்றும் அணிப் பிரிவு போட்டிகளில் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறேன். அதேநேரத்தில் அங்கு இரட்டையர் பிரிவு போட்டி இல்லாதது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

காமன்வெல்த் போட்டியில் நான் விளையாடியபோது எனது குடும்பத்தினரும், சக அணியினரும் வெளியில் இருந்து என்னை ஊக்கப்படுத்தியது பதக்கம் வெல்ல உதவியது எனக்கூறிய தீபிகா, “உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறபோது தனிமையில் இருக்க வேண்டியிருக்கும். எல்லா விஷயங்களையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் இந்திய அணியோடு இருக்கும்போது ஒரு குடும்பத்தோடு இருக்கிற உணர்வு ஏற்படும். நானும், ஜோஷ்னாவும் இரு வாரங்களுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்தோம். இந்திய ஆடவர் அணியும் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். எனது வருங்காலக் கணவரும், கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் என்னுடன் இருந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது” என்றார்.

தீபிகாவைப் போன்றே ஜோஷ்னா, சௌரவ் கோஷல் ஆகியோரும் இந்தியாவில் பெரிய அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறாதது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

கடைசியாக 2011-ல் பெரிய அளவிலான தொழில்முறை ஸ்குவாஷ் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான என்.ராமச்சந்திரன்தான் சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார். ஆனா லும் இந்தியாவில் பெரிய அளவி லான ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x