Published : 01 Aug 2024 05:48 PM
Last Updated : 01 Aug 2024 05:48 PM
கிரிக்கெட் ஆடும் காலத்தில் மே.இ.தீவுகளின் பயங்கர வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத் தைரியமாகப் போராடி அசத்திய அன்ஷுமன் கெய்க்வாட் கடைசி காலத்தில் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடி தோல்வி அடைந்து இறைவனடி சேர்ந்துவிட்டார். லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்ஷுமன் கெய்க்வாடின் கிரிக்கெட் வாழ்க்கை: அது ஹெல்மெட், உடல் காப்புக் கவசங்கள் எதுவும் இல்லாத காலக்கட்டம். அதுவும் பவுன்சர்கள் வீசக் கட்டுப்பாடு கிடையாது என்பதால், மே.இ.தீவுகளில் ஜமைக்காவில் ஆடுவது ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஆடுவதெல்லாம் சாதாரண காரியமல்ல. 22 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார் அன்ஷுமன். ஆனால் அந்த வயதில் வெஸ்ட் இண்டீஸின் ஆண்டி ராபர்ட்ஸ், ஹோல்டிங், வான்பன் ஹோல்டர், பெர்னர்ட் ஜூலியன், கீத் பாய்ச் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களைச் சந்திப்பதென்றால் அது சாதாரண காரியமல்ல என்பதை மேதை சுனில் கவாஸ்கரே ஒப்புக் கொண்டுள்ளார். அதுவும் அணியின் கேப்டன் பட்டௌடி அப்போதுதான் வேகப்பந்தில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் பெவிலியன் சென்றதைப் பார்த்து விட்டு இறங்குவதென்றால் அதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும்.
இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற தைரியன்கள் என்றால் அது கெய்க்வாட், மொஹீந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் என்று சொல்லலாம். ஹெல்மெட் இல்லாத காலக்கட்டத்தில் இவர்கள் தைரியம் அசாத்தியம். குறிப்பாக கொஞ்ச காலம் பிறகு தொடக்க வீரராக கெய்க்வாட் இறங்கிய போது மிகவும் கடினம்.
1975-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக கெய்க்வாட் அறிமுகமானார். முதல் நாளில் இந்திய அணி ஈடன் கார்டனில் 94/4. பட்டௌடி ராபர்ட்ஸ் பவுன்சரில் ரத்தம் சிந்தி வெளியேறிய நிலையில் விஸ்வநாத்துடன் இணைந்தார் கெய்க்வாட். அப்போது கெய்க்வாட் பற்றி விஸ்வநாத் பிறகு கூறிய போது, “22வயது கெய்க்வாட் டென்ஷன் ஆனார். பதற்றமாக இருந்தார் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அன்ஷுமன் கெய்க்வாட்டிடம் இந்த உணர்வுகளுக்கான தடயங்களே இல்லை” என்றார்.
கெய்க்வாட் அறிமுக இன்னிங்சில் பயங்கர வேகப்பந்து வீச்சுக்கும் லான்ஸ் கிப்ஸ் போன்ற அற்புத ஸ்பின்னருக்கும் எதிராக விஸ்வநாத்துடன் சேர்ந்து 75 ரன்களைச் சேர்த்தார். விஸ்வநாத் அருமையான 139 ரன்களை எடுக்க இந்திய அணி ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட்டை வென்றது. இதில் கெய்க்வாட் பங்களிப்பு பெரிதும் பாராட்டுதலுக்குரியதானது. கெய்க்வாட் பேட்டிங் ஒரு போதும் அழகாக இருந்ததில்லை. ஸ்டைலிஷ் பிளேயர் எல்லாம் இல்லை.
ஆனால் யுடிலிட்டி பிளேயர், அசாத்திய தைரியமான வீரர். இப்போதெல்லாம் விக்கெட்டை விட்டெறிந்து விட்டுச் செல்கின்றனரே, கெய்க்வாட் தன் விக்கெட்டை விலைமதிப்பில்லாததாக மதிக்கக் கூடியவர். அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 1985 ரன்கள் என்பது வெறும் எண்கள் அல்ல. ரத்தக்களறியை எதிர்கொண்ட போர்க்களம் ஆகும். ஜலந்தரில் 1982-83 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 671 நிமிடங்களில் 201 ரன்களை எடுத்தார். முதல் தரக் கிரிக்கெட்டில் அப்போது இதுதான் மெதுவான இரட்டைச் சதம் ஆகும்.
ஜமைக்கா கிங்ஸ்டனில் ரத்தக் களறி: 1976ம் ஆண்டு அப்போதைய அதிவேக பிட்ச் ஆன கிங்ஸ்டன் ஜமைக்காவில் கெய்க்வாட் ஆடிய ஆட்டம் உண்மையில் போர்க்கள ஆட்டம்தான். இந்த டெஸ்ட் போட்டிக்கு முந்தைய டெஸ்ட் போட்டியில்தான் இந்தியா போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 406 ரன்கள் இலக்கை விரட்டி கிளைவ் லாய்ட் தலைமை வெஸ்ட் இண்டீஸுக்கு பேரடி கொடுத்தது. இதில் கிளைவ் லாய்ட் கடுமையாகக் கோபாவேசமடைந்தார்.
அடுத்த டெஸ்ட் போட்டியான ஜமைக்காவில் இந்திய வீரர்களின் முகத்தை உடைப்பது என்ற திட்டத்தில் இறங்கினார் போலும். மைக்கேல் ஹோல்டிங், வெய்ன் டேனியல், ஜூலியன், வான்பன் ஹோல்டர் பவுன்சர்களாக இந்திய வீரர்களை நோக்கி ஏவுகணைகளாக வீசினர். நடுவர்களான டக்ளஸ் சாங் ஹீ, ரால்ஃப் கோசைன் ஏவுகணை வீச்சைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களை எச்சரிக்கவும் இல்லை. பவுன்சர் வீசினால் பரவாயில்லை, குனிய வாய்ப்புள்ளது, விலக வாய்ப்புள்ளது. அந்த வேகத்தில் முழு ஃபுல்டாஸை அதாவது பீமர் டெலிவரியை முகத்தை நோக்கிக் குறிவைத்தனர்.
கெய்க்வாடின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே பந்துகள் சர் சர்ரென்று தாண்டிச் சென்றன. சுமார் 6 மணி நேரம் போர்க்களத்தில் நின்று 81 ரன்களை எடுத்தார் கெய்க்வாட். கடைசியில் ஹோல்டிங் வீசிய பவுன்சர் ஒன்று இவர் காதைத் தாக்க காதுச்சவ்வே கிழிந்து பிற்பாடு இவருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது வேறு கதை. இந்த ரத்தக் களறி குறித்து கெய்க்வாட் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, “லஞ்சுக்கு முன்பாக கடைசி ஓவர், ஹோல்டிங், ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசினார். ஒரு பந்து எகிறி என் விரலைத் தாக்கியது.
நான் அயராமல் அடுத்த பந்துக்குத் தயாரான போது கிளவ்விலிருந்து ரத்தம் சொட்டத் தொடங்கியது. விக்கெட் கீப்பர் டெரிக் முர்ரேயும் விவ் ரிச்சர்ட்ஸும் என்ன ஆச்சு என்று என் அருகே வந்தனர். நான் அவர்களை கெட் லாஸ்ட் என்றேன். மைக்கேல் ஹோல்டிங் அவர் ரன் அப் முனையில் இருந்தார். நான் அப்போது ஹோல்டிங்கிடம் என் விரலைக் காட்டி பெரிய தவறு செய்தேன். நான் அதைச் செய்திருக்கக் கூடாது. வலியினாலோ, கவனக்குறைவாலோ அடுத்த பவுன்சரைக் கவனிக்கவில்லை. காதில் வந்து தாக்கியது. என் கண்ணாடி பறந்து போய் தூர விழுந்தது. என் மூளையில் மணிகள் அடிக்கத் தொடங்கின.
ஆனாலும் என்னை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வதை நான் விரும்பவில்லை மெதுவாக நடந்தே பெவிலியன் சென்றேன். கிருஷ்ணமூர்த்தியும் ஏக்நாத் சோல்கரையும் பிடித்துக் கொண்டே பெவிலியன் திரும்பினேன்.” என்றார். அப்போதெல்லாம் கிரிக்கெட் என்றால் அப்படி. இப்போதிருக்கும் வீரர்களில் இப்போதைய கவசங்கள் இல்லாமல் எத்தனை பேர் கெய்க்வாட், மொஹீந்தர், விஸ்வநாத், கவாஸ்கர் போல் தாக்குப் பிடித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் தெரியாமல்தான் இன்றைய இளம் கிரிக்கெட் ரசிகர்கள் கவாஸ்கரையும், கெய்க்வாட் போன்றவர்களையும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் கிரிக்கெட் மேனேஜராக இருந்தார், பயிற்சியாளராக, செலட்டராகவும் தைரியமான முறையில் பணியாற்றினார். இவரது பயிற்சி காலத்தில்தான் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடக்க வீரராக முதல் முறையாகக் களமிறக்கப்பட்டு, அதன் பிறகு சச்சின் பல வரலாறுகளைப் படைத்தார். இன்று அன்ஷுமன் கெய்க்வாடை நினைக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் நினைக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT