Published : 01 Aug 2024 04:58 PM
Last Updated : 01 Aug 2024 04:58 PM

பெல்ஜியத்திடம் இந்திய ஹாக்கி அணி தோல்வி | பாரிஸ் ஒலிம்பிக்

பெல்ஜியம் அணி வீரர்கள்

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 18-வது நிமிடத்தில் அபிஷேக் முதல் கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆனால், அதன் பிறகு பெல்ஜியம் மீண்டு வந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 33-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஸ்டாக்ப்ரோக்ஸ் கோல் அடித்து 1-1 என சமநிலைக்கு ஆட்டத்தைக் கொண்டுவந்தார். 44-வது நிமிடத்தில் ஜான் டோமன் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் ஆட்டத்தை இந்தியாவிடமிருந்து பறித்தார்.

இறுதியில் இந்திய வீரர்கள் கோல் அடிக்க முயன்றும் முடியாமல் போக, பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2 வெற்றிகள், 1 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி ‘பி’ பிரிவு புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியுற்ற போதிலும் இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒருவொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x