Published : 31 Jul 2024 11:40 AM
Last Updated : 31 Jul 2024 11:40 AM

‘சும்மா ஜெயிங்கப்பா...’; ‘இல்லை வேண்டாம் சார்’ - 3வது டி20 எனும் கேலிக்கூத்து

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நேற்று இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது. ஆனால் இந்தப் போட்டி சர்வதேச போட்டிக்குரிய எந்த ஒரு தகுதி நிலைகளையும் எட்டவில்லை என்பதுதான் வேதனை.

அதாவது இந்தத் தொடரே சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு இணையா என்ற கேள்விதான் எழுகிறது. முதல் டி20-யில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை, 2வது டி20யில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தனர். நேற்று 15 ஓவர்கள் முடிவில் 110/1 என்ற நிலையிலிருந்து 28 பந்துகளில் 27 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் இந்திய அணியினர் பேட்டிங்கில் விட்டேத்தியாக ஆடி ஷுப்மன் கில் (39), ரியான் பராக் (26), வாஷிங்டன் சுந்தர் (25) ஆகியோர் பங்களிப்பில் 137 ரன்களை ஏனோதானோவென்று தோற்றால் பரவாயில்லை என்பது போல் ஆடி தேற்றி வைத்திருந்தனர். கேட்டால் பிட்ச் 'ஸ்பின் பிட்ச்' என்று கூறுவார்கள்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் நிசாங்கா 23 ரன்களையும் மெண்டிஸ் 43 ரன்களையும் குசல் பெரேரா 46 ரன்களையும் விளாசி 112 ரன்களை இவர்களே எடுத்துக் கொடுத்து விட்டனர். மீதி 7 பேர் சேர்ந்து வெறும் 12 ரன்களையே சேர்த்தால் அதை சர்வதேச போட்டி என்று அழைப்பதா?. அதுவும் கலீல் அகமது, சிராஜ் போன்றவர்களுக்கு ஓவர்கள் இருக்கும் போது சூரியகுமார் யாதவ் நக்கலாக ரிங்கு சிங்கிற்கு பவுலிங்கைக் கொடுக்கிறார். இவர் குசல் பெரேராவையும், ரமேஷ் மெண்டிஸையும் வீழ்த்துகிறார். ரிங்கு சிங் முன்னபின்ன பந்து வீசியதில்லை. இவர் 19வது ஓவரை வீசி வெறும் 3 ரன்களையே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார் இது என்ன சார் கொடுமை?

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்னும் போது சிராஜிடம் கொடுக்காமல், கலீல் அகமதுவிடம் கொடுக்காமல் இதுவரை பவுலிங் செய்து பழக்கமில்லாத சூரியகுமார் யாதவ் வீச வந்தார். அனைவருக்கும் ஆச்சரியம், இது என்ன கேலிக்கூத்து என்று. ஆனால் இவர் பந்துகளையும் அடிக்காமல் சொதப்பலாக ஆடி, சாதாரண லீக் கிரிக்கெட்டை விடவும் மோசமாக ஆடி இலங்கை வெறும் 5 ரன்களையே எடுத்து 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து டை செய்தது.

சூப்பர் ஓவர் பரிதாபங்கள் இதற்கும் மேல் வாசிங்டன் சுந்தர் வீச அடுத்தடுத்த பந்துகளில் குசல் பெரேரா, பதும் நிசாங்கா கையில் கேட்ச் கொடுத்து விட்டுச் செல்கின்றனர். 2 ரன்கள்தான் எடுத்தனர். சூரியகுமார் இறங்கி தீக்‌ஷனாவை பைன்லெக்கில் ஸ்வீப் ஆடினார். அங்கு என்னவென்றால் அஷிதா பெர்னாண்டோ கால்களுக்கு இடையே பந்தை கோட்டை விட்டு பவுண்டரி கொடுக்கிறார்.

இந்தப் போட்டியைப் பார்க்கும் போது, இந்திய அணி ‘சும்மா ஜெயிச்சுக்கோங்கப்பா, ஒரு மேட்ச்தான பரவாயில்லை’ என்று கூறியது போலவும், இலங்கை அணி ‘இல்லண்ணே, அது மரியாதை இல்ல... அது மரியாதை இல்லை’ன்னு சொல்லி தோற்றது போலவும் கேலிக்கூத்தாகப் போய் முடிந்துள்ளது. பிசிசிஐ-யின் செல்லப்பிள்ளை நாங்களே என்று இலங்கை அணி சொல்லாமல் சொல்வது போல்தான் இந்த டி20 தொடரே நடத்தப்பட்டது.

பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் நடுநிலை மைதானங்களில் கூட ஆட மாட்டோம் என்ற கொள்கையில் இப்படிப்பட்ட கேலிக்கூத்துத் தொடர்களைத் தவிர ரசிகர்களுக்கு வேறு என்னதான் கிடைக்கும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x