Published : 30 Jul 2024 04:09 PM
Last Updated : 30 Jul 2024 04:09 PM

ஒரே ஒலிம்பிக்... இந்தியாவுக்கு இரு பதக்கங்கள்... மனு பாகர் படைத்த சரித்திரம்!

மனு பாகர்

பாரிஸ்: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற தனித்துவ சாதனையை படைத்துள்ளார் மனு பாகர். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றிருந்தார். அதன் மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். தற்போது அந்தப் பட்டியலில் மனு பாகர் இணைந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கணக்கை மனு தொடங்கி வைத்தார்.

22 வயதான அவர், இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் வென்றதும், “நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அனைவரது அன்புக்கும், ஆசிக்கும் நன்றி. நமது கையில் இருப்பதை தான் கட்டுப்படுத்த முடியும். இங்கு வருவதற்கு முன்னர் அப்பாவுடன் பேசி இருந்தேன். இறுதி ஷாட் வரை போராடலாம் என்பது தான் திட்டம்” என தெரிவித்தார். அவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியின்போது அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இந்த முறை விட்டதை பிடிக்கும் முனைப்போடு களம் கண்ட அவர், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பாரிஸில் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இது ஓர் அற்புத கம்பேக். மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் போட்டியிட உள்ளார். அதிலும் அவர் ஆச்சரியங்கள் நிகழ்த்த வாய்ப்புள்ளது. ஏனெனில், அவரது கடந்த கால ரெக்கார்டுகள் அப்படி உள்ளன. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் வயது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தவர்.

16 வயதில் காமன்வெல்த் பதக்கம், 17 வயதில் ஒலிம்பிக் கோட்டா, 19 வயதில் முதல் ஒலிம்பிக் என மனுவின் பயணம் அமைந்துள்ளது. இப்போது 22 வயதில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். வரும் நாட்களில் மேலும் பல பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மனு அவதரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x