Published : 30 Jul 2024 10:51 AM
Last Updated : 30 Jul 2024 10:51 AM
நியூஸிலாந்துக்கு எதிராக 3-2 வெற்றியிலும் ஹர்மன்பிரீத் கடைசியில் பெனால்டி ஷூட்டில் அடித்த கோல் நேற்று அர்ஜெண்டினா அணிக்கு எதிராக 59-வது நிமிடத்தில் 4-வது பெனால்டி கார்னரில் ஹர்மன்பிரீத் தூக்கி விட்ட அட்டகாசமான ஷாட்டினால் ஆன ட்ராவிலும் இந்திய ஹாக்கி அணியிடம் உத்வேகமான ஆட்டம் இன்மை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
இப்போதைக்கு 2 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி விடலாம் என்று கருதினாலும் காலிறுதி நாக் அவுட் சுற்றில் இந்திய அணியின் இப்போதைய ஆட்ட முறை வெற்றி பெற உதவாது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஏனெனில், அயர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு செம டஃப் கொடுத்தது என்றே கூற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோலை அடிப்பதே கடினம், மேலும் 4,5 கோல்கள் வாங்காமல் 2 கோல்களை மட்டுமே அயர்லாந்து வாங்கியுள்ளது என்றால் ஆஸ்திரேலியாவுக்கே டஃப் கொடுக்கிறது என்றால் இப்போதிருக்கும் உத்வேகமில்லா ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கு என்ன மாதிரியான கடினங்களை அளிக்கும் என்பதைக் கணிப்பதே கடினம்.
நேற்று கூட அர்ஜெண்டினாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் சிங்கின் மந்தகதியிலான தடுப்பு உத்தியினால்தான் ஸ்ரீஜேஷ் இந்திய கோலுக்குள்ளேயே பந்து சென்று அர்ஜெண்டினா 1-0 என்று முன்னிலை வகிக்க வித்திட்டது. ஆகவே கோலானாலும் ஹர்மன்பிரீத், தடுப்பு மந்தநிலையானாலும் ஹர்மன்பிரீத் என்று ஒரே வீரரைச் சுற்றி இந்திய அணி செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
புரோ லீக் தொடரிலிருந்தே பார்த்தோமானால் இந்திய அணி முதல் கோலை எதிரணிக்கு தாராளமாக வழங்கி வந்ததைப் பார்த்து வருகிறோம் இப்போது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் நியூஸிலாந்து, அர்ஜெண்டினாவுக்கும் எதிராக முதல் கோலை எதிரணியினரே அடித்தனர். இது ஹாக்கியைப் பொறுத்தவரை நல்ல விஷயம் அல்ல. முதல் கோலை இந்திய அணி அடிக்க வேண்டும், மேன்மேலும் கோல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால், இந்த இந்திய அணியில் ஒரேயொரு அட்டாக் உத்திதான் வைத்துள்ளனர். அது என்னவென்றால் ‘லாங் பாஸ்’ போட்டு எதிரணியின் டி-சர்க்கிளுக்குள் நுழைவது, அந்த உத்தி தடுக்கப்படும் போது திணறுகின்றனர். பல்வேறு விதமான அட்டாக்கிங் உத்திகள் இல்லை என்பது பயிற்சியாளர் ஃபுல்டன் பார்க்க வேண்டிய விவகாரம்.
ஹர்மன்பிரீத்தின் 3 ட்ராக் பிளிக் ஷாட்களை அர்ஜெண்டினா கோல்கீப்பர் சாண்டியாகோ தடுத்தார். அபிஷேக்கின் இரண்டு ரிவர்ஸ் ஷாட்களையும் அவர் தடுத்தார் எனவே நாங்கள் அட்டாக்தானே செய்கிறோம் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கூறினால், இவையெல்லாம் தனிமனித அபார ஆட்டமே தவிர திட்டமிடப்பட்ட, அணியாக திரண்டெழுந்து ஒரு நகர்வை ஏற்பாடு செய்து கொண்டு செல்லும், ஒரு அமைப்பாகச் செல்லும் தன்மையைக் கொள்ளவில்லை என்று ஹாக்கி நிபுணர்கள் கூறுவார்கள்.
இந்த இரண்டு ஆட்டங்களிலுமே இந்திய அணியின் பிரமாதமான சுறுசுறுப்பான நடுக்கள வீரர் ஹர்திக் சிங் கிட்டத்தட்ட முடக்கப்பட்டார் என்றுதான் கூற வேண்டும் இதனால்தான் வாய்ப்புகளை உருவாக்க இந்திய அணியினர் சிரமப்படுகின்றனர்.
மேலும், பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து எளிதாக எதிரணிக்குக் கொடுத்து விடுவதும் இந்த இரண்டு ஆட்டங்களில் நடந்ததைப் பார்த்தோம். எதிரணியினர் ஒரு கோல் அடித்த பிறகு இந்திய அணி எந்த ஒரு அவசரத்தையும் காட்டாமல் குறிப்பாக ஹர்மன்பிரீத்தும், அமித் ரோஹிதாசும் பந்தை தங்களுக்குள்ளேயே பாஸ்களைச் செய்து கொண்டது படுமோசமான காட்சியாக இருந்தது. பந்தை விறுவிறுவென முன்னே கொண்டு சென்றிருக்க வேண்டாமா? எத்தனைக்கு எத்தனை எதிரணியினரின் டி-சர்க்கிளுக்குள் நாம் பிரவேசிக்கிறோமோ அப்போதுதான் அவர்களை ஃபவுல் செய்ய வைக்க முடியும் பெனால்டி வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
பிறகு இந்திய அணியின் ஆட்ட முறையில் பெனால்டி வாய்ப்பு இல்லாமல் ஃபீல்ட் கோல் போடும் ஆக்ரோஷ அணுகுமுறை இல்லை. முதிர்ச்சியற்ற ஆட்டங்களையும் பார்க்க முடிகிறது. ஒலிம்பிக்கில் குரூப் ஸ்டேஜில் இவற்றை மறைத்துப் பயணிக்கலாம். ஆனால், நாக் அவுட் சுற்றில் இந்த கோளாறுகள் பட்டவர்த்தனமாகிவிடும் அதற்குள் ஃபுல்டன் ஹாக்கி நிபுணர்கள், வர்ணனையாள்களின் விமர்சனங்களுக்குக் காது கொடுக்க வேண்டும் என்பதே ஹாக்கி பதக்கத்தை எதிர்நோக்கும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment