Published : 30 Jul 2024 08:35 AM
Last Updated : 30 Jul 2024 08:35 AM
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.
33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தமனு பாகர் போட்டியின் 3-வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில்சரப்ஜோத் சிங்குடன் இணைந்து களமிறங்கினார். 17 ஜோடிகள் கலந்து கொண்ட இந்த பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் பதக்க சுற்றுக்கு முன்னேறும்.
இதில் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கொரியா ஜோடி தகுதி சுற்றில் 579 புள்ளிகளை குவித்து 4-வது இடம் பிடித்திருந்தது.
மற்றொரு இந்திய ஜோடியான ரிதம் சங்க்வான், அர்ஜூன் சிங் சீமா ஜோடி 576 புள்ளிகளை சேர்த்து 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. துருக்கியின் தர்ஹான் செவ்வால், யூசுப் டிகெக் ஜோடி 582 புள்ளிகளுடன் முதலிடமும், செர்பியாவின் ஸோரானா அருனோவிக், டாமிர் மிகெக் 581 புள்ளிகளையும் குவித்து தங்கப் பதக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.
ஹர்மீத் தேசாய் தோல்வி: டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஃபெலிக்ஸ் லெப்ரனுடன் மோதினார். இதில் ஹர்மீத் தேசாய் 8-11, 8-11, 6-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஏற்கெனவே சரத் கமலும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஹர்மீத் தேசாயும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
ரமிதா ஏமாற்றம்: துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் 145.3 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஒரு கட்டத்தில் 4-வது இடத்தில் ரமிதா இருந்தார். ஆனால் அதற்குபின்னர் அவரது செயல் திறனில் போதுமான முன்னேற்றம் காணப்படவில்லை.
போபண்ணா ஜோடி வெளியேறியது: ஆடவருக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடியானது பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாஸ்லின், கேல் மோன்பில்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா-பாலாஜி ஜோடி 5-7. 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. ஒற்றையர் பிரிவில் ஏற்கெனவே சுமித் நாகலும் தோல்வியை சந்தித்திருந்தார்.
அர்ஜூன் பபுதா 4-வது இடம்: துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதான 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடம் பிடித்தார். சீனாவின் லிஹாவோ 252.2 புள்ளிகள் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் வில்லியம் ஷானர் 251.6 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் லிஹாவோ. சுவீடனின் விக்டர் லிண்ட்கிரென் 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், குரோஷியாவின் மிரன் மரிசிக் 230 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
அஸ்வினி - தனிஷா ஜோடி தோல்வி: பாட்மிண்டனில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி தங்களது 2-வது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிஹாரு ஷிடா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அஸ்வினி - தனிஷா ஜோடி 11-21,12-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தது. ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் தென் கொரியா ஜோடியிடம் வீழ்ந்திருந்தது. தொடர்ச்சியான இரு தோல்விகளால் அஸ்வினி - தனிஷா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
லக்ஷயா சென் அசத்தல்: பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையரில் ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதல் ஆட்டத்தில் கவுதமாலாவின் கெவின் கோர்டானை தோற்கடித்திருந்தார். இந்நிலையில் இடது முழங்கை காயம் காரணமாக கெவின் கோர்டான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் லக்ஷயா செனின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்ஷயா சென் நேற்று பெல்ஜியத்தின் ஜூலியன் கராகியுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்ஷயா சென், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் நாளை (31-ம் தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார்.
சாட்விக் - ஷிராக் ஆட்டம் ரத்து: பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி ஜோடி தங்களது 2-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்ஃபஸ், மார்வின் சீடல் ஜோடியுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் ஜெர்மனி ஜோடி காயம் காரணமாக விலகியது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சாட்விக்-ஷிராக் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் ஜோடியை வீழ்த்தியிருந்தது. இந்திய ஜோடி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்பியான் மற்றும் முஹம்மது ரியான் அர்டியான்டோ ஜோடியை எதிர்கொள்கிறது.
வில்வித்தையில் ஆடவர் அணியும் சோபிக்கவில்லை: வில்வித்தையில் ஆடவருக்கான அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவாரா, பிரவீன் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியானது மெட் காசோஸ், பெர்கிம் டுமர், அப்துல்லா யில்திர்மிஸ் ஆகியோரை கொண்ட இத்தாலி அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம் மகளிர் அணிகள் பிரிவிலும் இந்திய அணி கால் இறுதி சுற்றில் வீழ்ந்திருந்தது.
ஹாக்கியில் இந்திய ஆட்டம் டிரா: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று அர்ஜெண்டினாவுடன் மோதியது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் லூக்காஸ் மார்ட்டின்ஸ் பீல்டு கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணி போராடிய போதிலும் இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் போனது.
அதேவேளையில் இந்திய அணியினர் 9 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment