Published : 29 Jul 2024 01:45 PM
Last Updated : 29 Jul 2024 01:45 PM
திண்டுக்கல்: நடப்பு டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு ‘மன்கட்’ அவுட் அலர்ட் கொடுத்திருந்தார் நெல்லை ராயல் கிங்ஸ் பவுலர். அது குறித்து பார்ப்போம்.
‘மன்கட் அவுட்’ என்றால் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். ஏனெனில், கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது கிரிக்கெட் உலகில் விவாதமானது. இருந்தும் அது பவுலர்களின் உரிமை என அப்போது அஸ்வின் தெரிவித்திருந்தார். பலமுறை இந்த மன்கட் அவுட் சார்ந்து அவர் தனது கருத்தையும் சொல்லி உள்ளார்.
இந்நிலையில், நடப்பு டிஎன்பிஎல் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய போது அஸ்வினுக்கே மன்கட் அலர்ட் கொடுத்துள்ளார் நெல்லை பவுலர் மோகன் பிரசாத். இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது.
அந்த இன்னிங்ஸின் 15-வது ஓவரில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த அஸ்வின், பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸை கடந்தார். அதை கவனித்த மோகன் பிரசாத், அஸ்வினுக்கு மன்கட் அவுட் அலர்ட் கொடுத்தார். அது தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி தோல்வியை தழுவியது. அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மன்கட் அவுட்? - இந்த மன்கட் அவுட் முறை உருவான கதை சுவாரஸ்யமானது. 1947-ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய பவுலர் வினு மன்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் ரன் அவுட் செய்தார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதே பில் பிரவுனை, மன்கட் இப்படி ரன் அவுட் செய்தார். இதையடுத்து விளையாட்டின் மாண்பை மன்கட் நாசம் செய்துவிட்டார் என்று அப்போது ஊடகங்கள் அவருக்கு எதிராக விமர்சனம் செய்தன.
ஆனால், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், வினு மன்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிறகு இந்த ரன் அவுட் முறை, வினு மன்கட் பெயரிலேயே, மன்கட் அவுட் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை அவுட் அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக கருதப்படும் என எம்சிசி கடந்த 2022-ல் உறுதிப்படுத்தியது. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்து வீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்த முறையில் அவுட் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் இதனை அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி.
Ash அண்ணா be like : நீ படிச்ச School-ல நா Headmaster டா!
தொடர்ந்து காணுங்கள் TNPL | Dindigul Dragons vs Nellai Royal Kings | Star Sports தமிழில் மட்டும்#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/fI97alqNJl— Star Sports Tamil (@StarSportsTamil) July 28, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT