Published : 27 Jul 2024 06:40 PM
Last Updated : 27 Jul 2024 06:40 PM
பாரிஸ்: துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்க நம்பிக்கையாக அவர் திகழ்கிறார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவின் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் இணையும், ரமிதா - பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
அர்ஜூன் பாபுதா - ரமிதா ஜிந்தால் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தையும், வாலறிவன் - சந்தீப் சிங் இணை 626.3 புள்ளிகளைப் பெற்று 12-வது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதிச் சுற்றில் தென் கொரியாவை வீழ்த்தி சீனா முதல் தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவருக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா ஆகியோர் முறையே 9 மற்றும் 18 இடங்களைப் பிடித்து வெளியேறினர். சரப்ஜோத் சிங் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
அதன்பின், மாலை 4 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.
இன்று தொடக்கம் முதலே துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெறாத நிலையில் மனு பாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. மனு பாகரை பொறுத்தவரை 2023-ல் பைகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். 2019-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றிருந்தார். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவரால் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. தற்போது அவரின் இந்த முன்னேற்றம் நம்பிக்கை கொடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT