Published : 27 Jul 2024 07:04 AM
Last Updated : 27 Jul 2024 07:04 AM

பாரிஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்: அணிவகுப்பில் சரத் கமல், சிந்து தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்

பாரிஸ்: 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நேற்றுகோலாகலமாக தொடங்கியது. வரும்ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது. பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா அணி வகுப்பு நடைபெற்றது.

சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர். இந்த அணி வகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

மிதக்கும் அணிவகுப்பு ஜார்டின் டெஸ்பிளான்ட்ஸுக்கு அருகிலுள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்திலிருந்து புறப்பட்டு ட்ரோகாடெரோவில் முடிவடைந்தது. இதன் பின்னர் அங்குள்ள மைதானத்தில் தொடக்க விழாவின் இறுதிக்கட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டொரக்டேரோ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில்ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு முறைப்படி 33-வது ஒலிம்பிக் விளையாட்டுதொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழாவை லட்சக்கணக்கானோர் நேரில் கண்டுகளித்தனர்.

தொடக்க விழாவை தொடர்ந்து இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. பாட்மிண்டனில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் 14-ம் நிலை வீரரான இந்தியாவின் லக் ஷயா சென், 41-ம் நிலை வீரரானகவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதுகிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி பிரான்ஸின் லூகாஸ்கோர்வி, ரோனன் லாபர் ஜோடியை சந்திக்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடியானது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் கிம் சோ யியாங், ஹாங் ஹீ யங்ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் தகுதி சுற்றில் இந்தியாவின் சந்தீப் சிங்-இளவேனில் வாலறிவன் ஜோடி அர்ஜூன் பாபுதா- ரமிதா ஜிந்தால் ஜோடி பங்கேற்கிறது. இந்த போட்டி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த பிரிவில் இறுதிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவருக்கான தகுதி சுற்றில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா பங்கேற்கின்றனர். இந்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்றில் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்கின்றனர். இந்த போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் கடந்த இரு ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கைகூடவில்லை. இதற்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் தீர்வு கிடைக்கக்கூடும்.

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி தங்களது முதல் சுற்றில் பிரான்ஸ் ஜோடியான ரெபவுல்ஃபேபியன், ரோஜர் வாசலின் எட்வர்ட் ஜோடியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறுகிறது.

டேபிள் டென்னிஸில் ஆடவர்ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், ஜோர்டானின் அபோ யமன் சைத்துடன்மோதுகிறார். இந்த ஆட்டம்இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. குத்துச்சண்டையில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரீத்திபவார் முதல் சுற்றில் வியட்நாமின் வொ தி கிம்முடன் மோதுகிறார். இந்த போட்டி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x