Published : 05 May 2018 09:39 PM
Last Updated : 05 May 2018 09:39 PM
ஜடேஜாவை ஏன் அணியில் வைத்திருக்கிறார் தோனி? என்ற பரவலாக கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அவர் மீது தோனி வைத்த நம்பிக்கைக்கு இன்று ஜடேஜா முக்கியப் பாத்திரமாகத் திகழ்ந்தார். அதுவும் கோலியை பவுல்டு செய்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது.
ஹர்பஜன், ஜடேஜா இருவரும் 8 ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளையே கொடுத்து 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நீண்ட ஒற்றை இலக்க ஸ்கோர்களுக்குப் பிறகு டிம் சவுதியின் 36, பார்த்திவ் படேலின் அரைசதம் காரணமாக 127 ரன்களை ஆர்சிபி எட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் தல தோனியின் அதிரடி சிக்சர்களில் ‘விசில்போடு’ வெற்றியை ஈட்டி முதலிடம் பிடித்தது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரும் இன்றைய வர்ணனையாளருமான முரளி கார்த்திக் சில நல்ல கேள்விகளை தோனியிடம் எழுப்பியபோது தோனி கூறியதாவது:
ஸ்பின்னர்களுக்கு பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை, பிட்சும் கொஞ்சம் ஏற்றத்தாழ்வான பவுன்ஸ் கொண்டதாக இருந்தது. அதனால் ஸ்பின்னர்கள் உண்மையில் நன்றாக வீச வேண்டும் என்று உணர்ந்தேன். இங்குதான் ‘பஜ்ஜிபாஜி, ஜடேஜா நன்றாக வீசினர், என்றார் தோனி.
பிறகு முரளி கார்த்திக், நீங்கள் அதிகம் அணிகளில் மாற்றம் செய்யாதவர், ஆனால் இம்முறை மாற்றங்கள் வருகிறதே என்று கேட்ட போது தோனி, “எங்களுக்கு பவுலிங் மீதுதான் சிறிய கவலை இருந்து வந்தது. சில முந்தைய ஆட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால் எந்த ஒரு தனிப்பட்ட வீரரும் தங்கள் கையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. அதாவது இறுதி ஓவர்களை நான் வீசுகிறேன் என்று ஒருவரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை.
ஆகவே நாக் அவுட் சுற்றுக்கு முன் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் சில மாற்றங்களைச் செய்து பார்த்தோம்” என்றார்.
உடனே முரளி கார்த்திக், பிராவோ மீது இறுதி ஓவர்களுக்கான முழு பொறுப்பு என்பது அழுத்தம் இருக்கிறதே என்று கேட்டார், அதற்குத் தோனி சிரித்தபடியே இன்று 2 ஓவர்கள்தான் வீசினார் என்றார்.
மேலும், “நாங்கள் 2 ஸ்பின்னர்கள், மீதி வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற சேர்க்கையில் ஆடுகிறோம். இது மற்றவர்களின் அழுத்தத்தைக் குறைத்து பிராவோ இறுதி ஓவர்களை வீசுவதற்கு அனுமதிக்கிறது. அவர் ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆனாலும் எப்போதும் 4 ஓவர்களை அவர் கடைசியில் வீச வேண்டியிருக்காது. அனைவரின் மீதும் அழுத்தம் உள்ளது. 9-10 ஆண்டுகளில் ஒருவரும் ஆட்டத்தை மேம்படுத்தி சீரான முறையில் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற பிட்ச்கள் ஜடேஜாவுக்கு சாதகமானது. விராட், ஏபிடி அவுட் ஆனது அவருக்கு உதவியது. ஆனாலும் அவர் நன்றாகவே வீசினார். அணியும் மொத்தமாக நன்றாகவே வீசியது” என்றார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT