Published : 26 Jul 2024 09:07 AM
Last Updated : 26 Jul 2024 09:07 AM
பாரிஸ்: பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் தென் கொரிய வீராங்கனை லிம் சி-ஹியோன், தனிநபர் ரேங்கிங் சுற்றில் உலக சாதனை படைத்துள்ளார்.
மகளிர் தனிநபர் பிரிவில் பங்கேற்ற லிம், 720 புள்ளிகளுக்கு 694 புள்ளிகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் முந்தைய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனையை அவர் தகர்த்தார்.
இதற்கு முன்னர் 72 முறை அம்புகளை எய்தும் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவின் அன் சான் 692 புள்ளிகளை எடுத்தது உலக சாதனையாக இருந்தது. அதனை 2019 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் அவர் படைத்திருந்தார். தற்போது அதை லிம் முந்தியுள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது என்ட்ரியை அவர் உரக்க சொல்லியுள்ளார். இந்த முறை பதக்க வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.
இதே சுற்றில் 688 புள்ளிகளை மற்றொரு தென் கொரிய வீராங்கனை நம்-சுயோன் பெற்றார். அதன் மூலம் அவர் இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாம் இடத்தை சீனாவின் யங், 673 புள்ளிகளுடன் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 2046 புள்ளிகளை பெற்று இதில் முதல் இடம் பிடித்துள்ளது தென் கொரியா.
இதில் இந்தியாவின் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11-வது இடம் பிடித்திருந்தார். பஜன் கவுர் 22, மற்றும் தீபிகா குமாரி 23-வது இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT