Published : 22 Jul 2024 09:23 PM
Last Updated : 22 Jul 2024 09:23 PM
கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வந்த முதல் மாற்றம், சமீப காலங்களாக அணி தேர்வுக்குழுத் தலைவர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருந்தனர். இப்போது கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகார்க்கருடன் செய்தியாளர்களைச் சந்திப்பது வெளிப்படைத் தன்மைக்கான முதல் அடியாகப் பார்க்கப்படலாம். ஆனால், அணியில் இந்த வீரர்கள் இல்லையே ஏன்? மற்றும் அணித்தேர்வின் தன் பரிந்துரைகள் பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது முரணாகப் பார்க்கப்படலாம்.
ஏனெனில், டி20 உலகக் கோப்பை தொடரில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் யுவேந்திர சாஹல் இடம்பெற்றிருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அல்லது அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், ஷுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே தொடரிலும் சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. இலங்கைத் தொடருக்கான அணியிலும் அவர் இல்லை. வழக்கமாக அவருக்கு ‘ஓய்வு’ அல்லது ‘காயம்’ என்று எதையாவது சொல்வார்கள். ஆனால், சாஹலுக்கு அந்தப் பாக்கியம் கூட இல்லை. அவரது தேர்வின்மை குறித்து யாரும் கேள்வி கூட எழுப்பத் தகுதியற்ற ஒரு வீரராகி விட்டார் போலும்.
எனவே சாஹலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்பதைத் தவிர வேறு இல்லை என்பதையே இது நமக்கு சூசகமாக அறிவுறுத்துகிறது. சஞ்சு சாம்சனுக்கும் இதையே கூற முடியும். ஜடேஜாவுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. ஷமி நிலைமை என்னவென்று தெரியவில்லை. அல்லது ஷமி குறித்து கம்பீரும் தேர்வுக்குழுவும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரவி பிஷ்னாய்க்கு நிறைய சர்வதேசப் போட்டிகளில் ஆடும் அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் நினைக்கின்றனர்.
சாஹல் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளை 27.13 என்ற சராசரியில் 5.26 என்ற சிக்கன விகிதத்திலும், 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை 8.18 என்ற சிக்கன விகிதத்திலும் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்து வீச்சு 6/42, டி20-யில் 6/25. லாடர்ஹில்லில் கடைசியாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 13 ஆகஸ்ட் 2023-ல் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக் கொடுத்ததுதான் அவரது கடைசி டி20 போட்டி. 12.75 என்ற சிக்கன விகிதம் அவர் கரியரிலேயே மிகவும் அதிகம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020-ல் சிட்னி போட்டியில் செம சாத்து வாங்கி ஓவருக்கு 12.75 என்ற வீதத்தில் ரன்களைக் கொடுத்துள்ளார். அதாவது இந்த அதிக ரன்கள் கொடுத்தது 4 ஓவர்கள் வீசி கோட்டாவை பூர்த்தி செய்த நிலையிலாகும். மற்றபடி ஒருமுறை இலங்கைக்கு எதிராக 2 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தது மிக அதிகம். ஆனால், ஒருநாள் போட்டிகளில் சிக்கன விகிதம் 5.26 என்பது பிரமாதமானது.
எனவே சாஹலை டி20 போட்டிகளுக்கு வேண்டாம் என்று ஒதுக்கினாலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு வைத்துக் கொள்வது நல்லது. ஆனால், அவர் இப்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணியிலும் இல்லை. இதில் அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கொடுக்கலாம். இதில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் 2019-ல் சாஹல் தன் சிறந்த பந்து வீச்சாக 6 விக்கெட்டுகளை 42 ரன்களுக்கு கைப்பற்றினார். 5 முறை 4 விக்கெட்டுகளையும் 2 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சாஹல் புறக்கணிப்புக்குக் காரணம் என்ன? - அதாவது இவர் வெறும் பவுலர் என்பதுதான் பிரதான காரணம். களத்தில் வேகமாக ஆடி ஓடி பீல்டிங் செய்யக்கூடியவரும் அல்ல. கொஞ்சம் மந்தமானவர் என்பது உண்மைதான். பேட்டிங்கில் நம்பர் 11 வீரர் உண்மையில் எப்படி ஆடுவாரோ அதே போல் சொதப்பல்தான். ஆனால், சாஹலின் பலம் அவரது ரிஸ்ட் லெக் ஸ்பின் பவுலிங். மேட்சையே மாற்றக்கூடிய பவுலர். எனவே இவரது கரியரை இதோடு முடித்து விடாமல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டிகளுக்கு இவருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். அதுவும் துணைக்கண்டத்தில் நடக்கிறபடியால் சாஹல் ஒரு மேட்ச் வின்னராக இருப்பார்.
இப்போது ஆல்ரவுண்டர்களைத்தான் இந்திய அணி தேர்வுக்குழு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படுகின்றனர். ஆனால் ரவி பிஷ்னாயைத் தேர்வு செய்பவர்கள் சாஹலுக்கு வாய்ப்பளிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
சாஹலுக்கு இனி வாய்ப்புக் கிடைத்தால் அது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாக மட்டுமே இருக்கலாம். அதற்கான வாய்ப்பும் மிக மெல்லியதே. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சாஹல் சர்வதேச கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT