Last Updated : 03 May, 2018 12:56 PM

 

Published : 03 May 2018 12:56 PM
Last Updated : 03 May 2018 12:56 PM

ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம் அறிவித்துள்ளது.

இவர் இம்மாதம் 22-ம் தேதி பயிற்சியாளராகப் பதவி ஏற்கிறார். லாங்கர் பதவியில் இருக்கும் 4 ஆண்டுக் காலத்தில் 2 ஆஷஸ் கோப்பை தொடர், உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை ஆகிய போட்டிகளை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினர். இதையடுத்து, இவர்களிடம் விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஸ்மித்துக்கும், வார்னருக்கும் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்தது.

ஆனால், பயிற்சியாளர் லீ மான் மீது எந்தவிதமான புகாரும் தெரிவிக்கப்படாத நிலையில், தன்னுடைய பொறுப்பில் இந்தத் தவறு நடந்ததற்காகத் தார்மீக பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு இருந்தது. இந்நிலையில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கும் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பயிற்சி அளித்து வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கரை நியமிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

இது குறித்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லாங்கர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மீது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வீரர்களின் நடத்தைகள் அனைத்தும் இதற்கு முன் நல்லவிதமாகவே இருந்தது. அதை நாம் தொடர்ந்து கடைபிடித்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எப்போதுமே நமக்கான மரியாதையைத் தக்கவைத்து இருப்பது மிகவும் அவசியமாகும். உலகில் தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்பு மிக்கது மரியாதையாகும்.

நம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தைகள் என்னவென்று தெரியும். போட்டிக்கும், ஆக்ரோஷத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதில் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நாம் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களையும், சிறந்தமனிதர்களையும் ஊக்குவிக்க வேண்டும். நாம் சிறந்த மனிதர்களை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்குச் சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள். என்னைப் பொறுத்தவரை அடிப்படை கட்டமைப்புக்கு இது மிகவும் அவசியமாகும்.

இதற்கு முன் என்ன நடந்ததோ அதில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம். ஸ்மித், வார்னர் இருவரும் சிறந்த வீரர்கள், ஆனால், தவறு செய்தது மிகுந்த வியப்புக்குள்ளாக்குகிறது. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால், அதில் இருந்துதான் நாம் சிறப்பானவற்றை கற்று வருகிறோம்.

இவ்வாறு லாங்கர் தெரிவித்தார்.

அனுபவங்கள்…

justin-langer1jpgஜஸ்டின் லாங்கர் 100 

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7,696 ரன்கள் குவித்துள்ளார். இதில் 23 சதம், 30 அரைசதங்கள் அடங்கும். ஏறக்குறைய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 20ஆண்டுகளுக்கும் மேலாக லாங்கர் விளையாடி வந்துள்ளார். 360 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில்விளையாடி, 28 ஆயிரத்து 382 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக லாங்கர் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார்.

பிஸ்பாஷ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி லாங்கர் பயிற்சியின் கீழ் 2013-14, 2014-15, 2016-17 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆஸ்திலேலிய அணிக்குக் கடந்த 2009 முதல் 3 ஆண்டுகளுக்குத் துணை பயிற்சியாளராகவும் லாங்கர் பணியாற்றியுள்ளார். மேலும் இடைக்காலமாக 2016-ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் பயணம், இலங்கைப்பயணம் ஆகியவற்றின் போது பயிற்சியாளராகவும் லாங்கர் பணியாற்றிய அனுபவம்மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x