Published : 22 Jul 2024 04:29 PM
Last Updated : 22 Jul 2024 04:29 PM
மும்பை: வரும் சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் தங்களது திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சார்ந்து தான் வைத்துள்ள எதிர்கால திட்டம் முதல் பல்வேறு தகவல்களை கம்பீர் பகிர்ந்தார். “முக்கிய தொடர்களில் தங்களது பங்கு என்ன என்பதை ரோகித் மற்றும் கோலி நிரூபித்துள்ளனர். அது டி20 உலகக் கோப்பை அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் இருவரும் தங்களது அணியில் அவசியம் இடம்பெற வேண்டுமென எந்தவொரு அணியும் விரும்பும்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் அடுத்த ஆண்டு சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அது இரண்டுக்கும் அவர்கள் இருவரும் அவசியம். அதே போல 2027 உலகக் கோப்பை தொடரும் உள்ளது. அவர்கள் ஃபிட்னஸ் உடன் இருந்தால் நிச்சயம் அதிலும் பங்கேற்கலாம். இருப்பினும் அந்த முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும். அணியின் வெற்றிக்காக அவர்கள் விரும்பும் வரை தங்களது பங்களிப்பை வழங்கலாம்.
கோலி உடனான உறவு குறித்து: களத்தில் வீரர்கள் தாங்கள் சார்ந்துள்ள அணிக்காக தான் இயங்க முடியும். இப்போது நாங்கள் இருவரும் 140 கோடி மக்களின் சார்பாக இந்திய அணியில் உள்ளோம். அவருடன் எனக்கு நல்லதொரு உறவு உள்ளது. அதை தொடருவேன். நிறைய பேசி உள்ளேன். அது ஆட்டத்துக்கு முன்னும், பின்னுமாக இருந்துள்ளது. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. உலக தரம் வாய்ந்த வீரர். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.
பெரிய பொறுப்பை ஏற்கிறேன்: அனைத்து வீரர்களுக்கும் எனது ஆதரவு நிச்சயம் இருக்கும். அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன். அதில் எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. மகிழ்ச்சியான ட்ரெஸ்ஸிங் ரூம் தான் வெற்றிகளை குவிக்கும். நான் வெற்றிகரமான ஒரு அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளேன். டி20 உலக சாம்பியன், 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் விளையாடிய அணி இது. அந்த வகையில் மிகப் பெரிய பொறுப்பை நான் ஏற்கிறேன். ஜெய் ஷாவுடன் எனக்கு நீண்ட காலமாக வலுவான புரிதலுடன் கூடிய நட்பு உள்ளது. அதை அப்படியே தொடர விரும்புகிறேன்” என கம்பீர் தெரிவித்தார்.
அஜித் அகார்கர்: “ஜடேஜா ஒருநாள் அணியில் நீடிக்கிறார். அவரை நாங்கள் டிராப் செய்யவில்லை. எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கி உள்ளோம். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவர் அபார திறன் கொண்ட வீரர். ஆனால், ஃபிட்னஸ் சார்ந்து சில சவால்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆடக்கூடியவர் வேண்டும் என்ற முறையில் கேப்டன்சி திறன் கொண்ட சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அணியில் 15 வீரர்களை மட்டுமே நாம் தேர்வு செய்ய முடியும். அதனால் அணி தேர்வு சார்ந்து எந்த வீரருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. ஷுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் 3டி வீரர் என்பதால் அணியில் இடம்பெற்றுள்ளார். இளம் வீரர்கள் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டியது அவசியம்” என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT