Published : 21 Jul 2024 07:03 AM
Last Updated : 21 Jul 2024 07:03 AM
ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஹாக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பதக்கங்கள் வென்றுள்ளது மல்யுத்த விளையாட்டுதான். மல்யுத்தத்தில் இதுவரை இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது.
1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்காக முதன் முதலில் கஷாபா ஜாதவ் பதக்கம் வென்றார். இதன் பின்னர் அடுத்த பதக்கத்தை வெல்ல இந்தியா 56 வருடங்கள் காத்திருந்தது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் தொடர்ச்சியாக இரு ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர், படைத்திருந்தார். இதன் பின்னர் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர்தத் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இவர்களைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் 58 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ரவி தாஹியா 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கமும் வென்று பெருமை சேர்த்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவில் இருந்து 6 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் 5 பேர் வீராங்கனைகள் ஆவர். அவர்களது செயல் திறன் குறித்த ஓர் அலசல்...
அன்டிம் பங்ஹால்: மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் அன்டிம் பங்ஹால். கடந்த ஆண்டு பெல்கிரேடில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் வாயிலாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் அன்டிம் பங்ஹால். பெல்கிரேடு போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற டொமினிக் பாரிஷ், 5 முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ரோக்சானா ஜசினா, நடாலியா மலிஷேவா, ஜோன்னா மால்ம்கிரீன் ஆகியோரை அன்டிம் பங்ஹால் தோற்கடித்து இருந்தார். தற்போது உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள அன்டிம் பங்ஹால், கடந்த மாதம் நடைபெற்ற தரவரிசை தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றார்.
வினேஷ் போகத்: மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் பதக்கம் வெல்லக்கூடிய வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் வினேஷ் போகத். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக போராடிய வினேஷ் போகத், தனது எடை பிரிவை 53 கிலோவில் இருந்து 50 கிலோவுக்கு மாற்றி உள்ளார். இந்த எடை குறைப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் அவருக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற அவர், ஆசிய அளவிலான தகுதி சுற்றில் கலந்து கொண்டார். இதில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். திடமான தற்காப்பு ஆட்டமும், சம அளவிலான தாக்குதல் ஆட்டமும் வினேஷ் போகத்தின் பலமாக கருதப்படுகிறது.
அன்ஷு மாலிக்: மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில்களமிறங்குகிறார் அன்ஷு மாலிக். 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலகசாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும், 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இருப்பினும், காயம் அவரது முன்னேற்றத்தைத் தடுத்தது.
இதில் இருந்து மீண்ட அவர், ஆசிய தகுதிப் போட்டிகளில் கிர்கிஸ்தானின் கல்மிரா பிலிம்பெக் கைசி மற்றும் உஸ்பெகிஸ்தானின் லேலோகோன் சோபிரோவா ஆகியோரை தோற்கடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆக்ரோஷமான பாணியை கொண்ட அன்ஷு மாலிக்கின் மிகப்பெரிய பலம் விரைவாக செயல்படுவதுதான்.
நிஷா தாஹியா: மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் நிஷா தாஹியா. உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் ஹங்கேரியின் அலினா சவுசுக், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற செக் குடியரசின் அடெலா ஹன்ஸ்லிகோவா ஆகியோரை வென்றார். தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ருமேனியாவின் அலெக்ஸாண்ட்ரா ஏஞ்சலுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நிஷா தாஹியா பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அச்சமற்ற அணுகுமுறை நிஷா தாஹியாவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. எனினும் ஆட்டத்தின் கடைசி 2 நிமிடங்களில் புள்ளிகளை பறிகொடுப்பது அவரது பலவீனமாக உள்ளது.
ரீதிகா ஹூடா: மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் ரீதிகா ஹூடா. இந்த ஆண்டு அவர், விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்த பார்மில் உள்ளார். ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வாங் ஜுவான், ஹ்வாங் யூன்-ஜூ, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற என்க்-அமரின் தவானசன், சீன தைபேயின் சாங் ஹுய்-ட்ஸ் ஆகியோரை தோற்கடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ரீதிகா ஹூடா. அபாரமான பார்மில் உள்ள ரீதிகா ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக் கூடிய இந்திய வீராங்கனைகளில் வினேஷ் போகத்துக்குப் பிறகு நம்பிக்கை அளிக்கக் கூடியவர்.
அமன் ஷெராவத்: ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார் அமன் ஷெராவத். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் கலந்து கொள்ளும் ஒரே வீரர் இவர் மட்டுமே. கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்த ஆண்டு உலக தகுதிச் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் அமன் ஷெராவத் வெற்றி கண்டிருந்தார். அந்த தொடரில் அவர், பல்கேரியாவின் ஜார்ஜி வாங்கலோவ், உக்ரைனின் ஆண்ட்ரி யாட்சென்கோ மற்றும் வட கொரியாவின் ஹான் சோங்-சாங் ஆகியோரை வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT