Published : 19 Jul 2024 02:46 PM
Last Updated : 19 Jul 2024 02:46 PM

சூரியகுமார் யாதவுக்கு கேப்டன்சி... - கம்பீரின் ஆரம்பம் நல்ல அறிகுறியா?

இலங்கை தொடருக்கு கவுதம் கம்பீர் என்ற ஆக்ரோஷ கண்டிப்பு பயிற்சியாளர் தலைமையின் கீழ் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி செல்கிறது.

நியாயமாகப் பார்த்தால் 3 டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாதான் கேப்டனாகியிருக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் கம்பீருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இருக்கும் வேறுபாடுகள் இருக்கலாம் என்று ஊகித்தறிய முடிகிறது. பாண்டியாவுக்கு வைஸ் கேப்டன்சியும் கொடுக்கப்படவில்லை. சூரியாவுக்கு தலைமைத்துவ பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் ஒருநாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டன், ஷுப்மன் கில் வைஸ் கேப்டன். இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல் தெரிகிறது. அதாவது டி20 உலகக் கோப்பையில் பிரமாதமாக ஆடியிருக்கலாம். அதற்காகவெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டைப் புறக்கணிப்பவர்களுக்கெல்லாம் கேப்டன்சியைத் தூக்கி உடனே கொடுத்துவிட முடியாது. இது தவறான முன்னுதாரணமாகப் போய்விடும் என்று அணி நிர்வாகம் கருதியிருக்கலாம்.

மேலும் ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியதும், மனைவியும் இவரும் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவும் இவரது இப்போதைய மனநிலையில் கேப்டன்சி போன்ற பெரிய பொறுப்பு சரியாக அமையாது என்று நிர்வாகம் கருதியிருக்கலாம்.

ஆனால் இந்த முறை செலக்‌ஷன் அறை சுமுகமான முடிவுகளை எட்டும் நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை என்று பிசிசிஐ-க்கு நெருங்கிய செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. கருத்து வேறுபாடுகளும், மாறுபட்ட கருத்துகளும், பரிந்துரைகளும் சூடான விவாதங்களும் நிரம்பிய ஒன்றாக இருந்ததாக முன்னணி ஆங்கில நாளேட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. இரண்டு நாட்களுக்கு சிலபல மணி நேரங்கள் விவாதம் ஓடியதாகவும் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவா, ராகுலா, கில்லா, சூரியகுமார் யாதவ்வா யார் இந்திய கிரிக்கெட்டின் கேப்டன்சி எதிர்காலம் என்பதைத் தீர்மானிக்க முன்னாள் வீரர்கள் பலரும் கூட கலந்தாலோசிக்கப்பட்டதாக அதே ஆங்கில நாளேட்டுச் செய்தி கூறுகிறது.

சூரியகுமார் யாதவ்வுக்கு கேப்டன்சி அளித்திருப்பது பலருக்கும் ஆச்சரியமே. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகே பாண்டியாதான் நியமிக்கப்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பைக்கும் இவரே கேப்டனாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடரில் காயமடைந்தார். மீண்டும் வரும்போது அஜித் அகார்க்கர் - ராகுல் திராவிட் குழு ரோஹித் சர்மாதான் சரி என்று நினைத்திருக்கலாம்.

ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான ஒரு விஷயம் அவரது உடற்தகுதி ஒன்றுதான். அடிக்கடி காயமடைகிறார். அவர் மீதான நம்பகத்தன்மை உறுதியாகவில்லை. கம்பீரும் இவ்வாறு நினைத்து சூரியகுமார் தான் சிறந்த தெரிவு என்று நினைத்திருக்கலாம். மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டேன் என்று பாண்டியா விலகியதும் தேர்வுக்குழுவின் மத்தியில் ஐயங்களை எழுப்பியுள்ளது.

அனைத்துக்கும் மேலாக சூரியகுமார் யாதவுக்கு அணியில் உள்ள வீரர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. சூரியகுமார் யாதவ்வின் கேப்டன்சி அணுகுமுறை, வீரர்களுடனான உறவு, தொடர்புபடுத்தும் முறைகள் ஆகியவை இவருக்கு பக்கபலமாக ஸ்கோர் செய்துள்ளது. ஆனால் சூரியகுமார் யாதவ் மீது இத்தனை நம்பிக்கை வைத்தவர்கள் ஏன் அவரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணியில் காரணமில்லாமல் விலக்கி வைத்தனர் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆகவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பிறகே ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் நன்மதிப்பை இழந்து விட்டார் என்றாலும், டி20 உலகக் கோப்பை வெற்றி மூலம் கொஞ்சம் அந்த இழப்பை சரி செய்திருக்கலாம். ஆனால் அதற்குள் அவருக்கு உயர்ச்சியைக் கொடுத்து விடக்கூடாது என்பதில் தேர்வுக் குழுவினரும் கம்பீரும் கருதியிருக்க வாய்ப்புள்ளது. எது எப்படியோ, கம்பீரின் ஆரம்பமே, விவாதங்களும், வேறுபாடுகளுமாக இருக்கிறதே? என்ற ஐயம் கிரிக்கெட் உலகில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x