Published : 17 Jul 2024 11:31 AM
Last Updated : 17 Jul 2024 11:31 AM

டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்திக்கு கம்பீர் வாய்ப்பளிப்பாரா?

இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே தொடருக்கு முற்றிலும் புதிய அணியுடன் ஷுப்மன் கில் கேப்டன்சியில் சென்று 4-1 என்று தொடரை வென்றுள்ளது. இலங்கைத் தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்கவுள்ளதால் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.

இலங்கை தொடர் 27ம் தேதி முதல் டி20 தொடரில் ஆரம்பிக்கின்றது. டி20 அணியில் ஐபிஎல் தொடரில் பிரமாதமாக வீசிய டி.நடராஜன் இந்த முறையாவது இடம்பெறுவாரா என்பதே தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் நடராஜனுக்கு வயது 33 ஆகிறது, இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் அவரிடம் உள்ளது. இந்நிலையில் அவரை முற்றிலும் கண்டு கொள்ளாமல் விடப்படுவது பிசிசிஐ அணித்தேர்வில் மீண்டும் வடக்கு/தெற்கு முரண் தலைதூக்குகிறதோ என்ற ஐயங்களை பலரிடத்திலும் எழுப்பியுள்ளது.

நடராஜன் இப்போது யார்க்கர் நடராஜனாக மட்டுமல்லாமல் பாட் கமின்ஸ் தலைமையின் கீழ் ஸ்லோ பவுன்சர் என்ற புதிய உத்தியையும் கற்றுக் கொண்டு பவர் ப்ளேயிலும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி, இறுதி ஓவர்களிலும் சரி அவர் எத்தனை பெரிய ஹிட்டர்களையும் கட்டுப்படுத்தும் பல விதமான பந்து வீச்சு முறைகளைக் கற்றுத் தேர்ந்துள்ளார். ஜிம்பாப்வே தொடரில் விடாமுயற்சி பவுலர் கலீல் அகமதுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும் அணியில் அர்ஸ்தீப் சிங் இருந்தால் இன்னொரு இடது கை பவுலர் தேவையில்லை என்ற மனப்போக்கு உள்ளதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

எங்கிருந்தோ உனாட்கட்டுக்கு 10 ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கொடுக்கும் பிசிசிஐ தேர்வாளர்கள் டி.நடராஜன் எப்போதோ அடைந்த காயத்தை மனதில் வைத்துக் கொண்டு இன்னமும் வாய்ப்புக் கொடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு கிரிக்கெ ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே கவுதம் கம்பீர், நடராஜனை இலங்கை தொடருக்கு அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இரண்டாவதாக ரவீந்திர ஜடேஜா நல்ல வேளையாக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் தமிழ்நாட்டு ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஜிம்பாப்வேயில் வாய்ப்புப் பெற்றார். அவரும் தன் தேர்வை நியாயப்படுத்தி தொடர் நாயகன் விருது வென்றார். 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளுடன் 5.16 ரன்களை மட்டுமே ஒரு ஓவரில் விட்டுக் கொடுத்த சராசரியை வைத்துள்ளார். ஆகவே மீண்டும் குல்தீப் யாதவ், செஹல் போன்றோருக்கு சிறப்பு வாய்ப்பு அளித்து வாஷிங்டன் சுந்தரைப் புறக்கணிக்க முடியாது. ஏதாவது ஒரு ஃபார்மெட்டில் சுந்தர் ஆடியே ஆக வேண்டும், அதே போல்தான் நடராஜனும் ஏதாவது ஒரு பார்மெட்டில் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

வாஷிங்டன் சுந்தரும் கடுமையாக ஒழிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் அவரின் பங்களிப்புக்காகவே அவருக்கு 10-15போட்டிகள் வரிசையாக வாய்ப்புத் தந்திருக்க வேண்டும், ஆனால் சில வீரர்களை stop-gap வீரர்களாக மட்டுமே பயன்படுத்துவதை பிசிசிஐ முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். விராட் கோலி-ரவி சாஸ்திரி காலக்கட்டத்தை விட ரோஹித் சர்மா-ராகுல் திராவிட் காலக்கட்டம் கொஞ்சம் பரவாயில்லை, நிறைய வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

ஆனால் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உதாரணமாக, ஐபிஎல் 2024 தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலும் கம்பீரின் வழிநெறியிலும் வென்றது. அந்த வெற்றியில் தமிழக ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியின் பங்களிப்பு அபரிமிதமானது, ஆனால் செஹலை திரும்ப அழைக்கின்றனர். மற்ற லெக் ஸ்பின்னர்களெல்லாம் பிசிசிஐ தேர்வுக்குழு கண்களுக்கு தெரிகின்றனர், ஆனால் ஜிம்பாப்வே தொடருக்குக் கூட வருண் சக்ரவர்த்தி பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இப்போது கேகேஆர் பயிற்சியாளர்தான் இந்திய அணிப் பயிற்சிப் பொறுப்புக்கு வந்துள்ளார். எனவே கம்பீர் மீண்டும் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

பொதுவாகவே தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய பரிசீலிக்கும் போது தமிழக வீரர்கள் மற்ற மாநில வீரர்களை விட இருமடங்கு சிறப்பாக ஆடினால்தான் வாய்ப்புக்கு பரிசீலிக்கப்படவே செய்கிறது என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த நிலைகளை கம்பீர் முதலில் மாற்ற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x