Published : 16 Jul 2024 11:56 AM
Last Updated : 16 Jul 2024 11:56 AM
மேற்கு இந்திய தீவுகளின் அதிகம் புகழடையாத, ஆனால் மிகப்பெரிய திறமைசாலியான பேட்டர் கார்ல் ஹூப்பர் மனதளவில் பலமில்லாதவர் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர். இவரை ‘ஏழைகளின் ரிச்சர்ட்ஸ்’ என்றே சில கிரிக்கெட் வல்லுநர்கள் அழைத்தனர். ஆனால் ஏனோ இவரால் ரிச்சர்ட்ஸ், லாரா போன்று பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை.
பிரையன் லாரா, “Lara: The England Chronicles” என்ற புத்தகத்தில் கார்ல் ஹூப்பரின் திறமைகளை விதந்தோதியதோடு அவர் பெரிய வீரராக, கிரேட் பிளேயராக நட்சத்திர அந்தஸ்தை அடைய முடியாமல் போன காரணங்களையும் எடுத்துரைத்துள்ளார். அதில் ஒரு இடத்தில் கார்ல் ஹூப்பரின் பேட்டிங் திறமைப் பற்றி விதந்தோதிய லாரா, ‘தானும், சச்சின் டெண்டுல்கரும் கூட ஹூப்பரின் பேட்டிங் திறமைக்கு அருகில் நெருங்க முடியாது’ என்று ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
1987-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கார்ல் ஹூப்பர் கரியர் நீடித்தது. ஆனால் அவரிடம் உள்ள திறமைக்கேற்ப அவரால் உச்சத்தை எட்ட முடியவில்லை. நியூஸிலாந்தின் மார்ட்டின் குரோவ் போன்ற ஒரு பேட்டிங் ஸ்டைல் உள்ள வீரர் கார்ல் ஹூப்பர். எப்படி மார்ட்டின் குரோவ் எந்த ஒரு பந்து வீச்சையும் அனாயசமாக எதிர்கொண்டு பார்ப்பவர்களுக்கே அடடே என்ன சுலபமாக ஆடுகிறார் என்று வியப்பை ஏற்படுத்தும் வீரரோ அதே வர்ணனையை கார்ல் ஹூப்பருக்கும் சொல்ல முடியும். மிகவும் அழகாக, ஸ்டைலாக ஆடக்கூடியவர், விவ் ரிச்சர்ட்ஸ் போலவே பயனுள்ள ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடியவர்.
கார்ல் ஹூப்பரின் பேட்டிங் பற்றி ஒருமுறை ஸ்டீவ் வாஹ், “கால்களின் விரைவு கதி நகர்வும் இனிமையான, ஆனால் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக் ப்ளே ஆகியவை ஹூப்பரின் பேட்டிங் முத்திரை” என்றார்.
102 டெஸ்ட் போட்டிகளில் கார்ல் ஹூப்பர் 5,762 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 36.46. . இந்தியாவுக்கு எதிராக 1987-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2வது டெஸ்ட் போட்டியிலேயே கடினமான இந்திய பிட்சில் சதம் விளாசி அசத்தினார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 233 ரன்கள், இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதே. டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்கள், 27 அரைசதங்கள். பவுலிங்கில் 114 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒரு முறை இலங்கைக்கு எதிராக 5/26 என்று விக்கெட் வீழ்த்தி மே.இ.தீவுகளுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
227 ஒருநாள் போட்டிகளில் 5,761 ரன்களை அடித்துள்ளார். சராசரி 35.34. 7 சதங்கள் 29 அரைசதங்கள். 113 நாட் அவுட் அதிகபட்ச ஸ்கோராகும். இவரும் சந்தர்பாலும் ஓப்பனிங்கில் இறங்கி பல பவுலிங்கை நாசம் செய்ததையும் நுணுக்கமான கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருக்கலாம். முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ சேர்த்து 36,391 ரன்களை எடுத்துள்ளார் ஹூப்பர். 1999-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் பிறகு 2001-ல் ஓய்வை ரத்து செய்து விட்டு மே.இ.தீவுகளின் கேப்டனானார்.
22 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்திருக்கிறார். 2001-02 இந்தியா அங்கு சென்றிருந்த போது தொடரை வென்றார். இவரது கேப்டன்சியில் மே.இ.தீவுகள் சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும் பிறகு இந்தியாவில் இந்திய அணியையும் வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. 2003 கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அவர் குட் பை சொல்லி விட்டுச் சென்றார்.
இப்படிப்பட்ட கார்ல் ஹூப்பர் பற்றி பிரையன் லாரா தன் புத்தகத்தில் கூறியதாவது: “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கார்ல் ஹூப்பரின் திறமையைப் பார்த்து வியந்தேன். என்ன மாதிரியான ஒரு பிளேயர்!. அவர் அனாயசமாக மிகவும் சுலபமாக பந்து வீச்சை எதிர்கொண்டது இளைஞரான எனக்கு மட்டுமல்ல மூத்த வீரர்களான ரிச்சர்ட்ஸ், ஹெய்ன்ஸ், கிரீனிட்ஜ் போன்றவர்களையே வாயைப்பிளக்கச் செய்தது.
மிகுந்த திறமையுடையவர் கார்ல் ஹூப்பர், ஆனால் அவரது திறமையைப் பற்றி அவருக்கே தெரியாமல் இருந்ததுதான் வருத்தம். அவர் தன் பிரமாதமான திறமைக்கு ஏன் நியாயம் செய்யவில்லை என்பதுதான் அவரைப் பற்றிய கேள்வியாக பலருக்கும் இருந்தது. அவர் ஏன் பலவீனமாக இருந்தார் என்பதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை.
விவ் ரிச்சர்ட்ஸ் என்னைக் கடிந்து கொண்டு 3 வாரங்களுக்கு ஒருமுறை என்னைத் திட்டி அழ வைப்பார் என்றால், கார்ல் ஹூப்பரை வாரம் ஒருமுறை அழ வைப்பார். விவ் ரிச்சட்ஸின் தொனி அப்படிப்பட்டது. பலமான மனிதராக இல்லை எனில் நாம் அவர் பேசும்பேச்சுக்கு, திட்டும் திட்டுக்கு அணியை விட்டு ஓடி விடுவோம். என்னை அவர் கடுமையாகத் திட்டினாலும் என்னை அது பாதிக்கவில்லை, அதாவது அதனால் நான் வளர்ந்தேன். ஆனால் கார்ல் ஹூப்பர்? விவ் ரிச்சர்ட்ஸை அவர் தவிர்க்கவே செய்தார். விவ் ரிச்சர்ட்ஸைப் பிடிக்கவில்லை என்று வீரர்கள் தைரியமாகக் கூற மாட்டார்கள்.
கார்ல் ஹூப்பர் நான் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த வீரர். அவரது திறமைக்கு அருகே என்னாலும் சச்சினாலுமே நெருங்க முடியாது என்றே கூறுவேன். அவர் கேப்டனாக இருக்கும் போது அவரது பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 50. எனவே பொறுப்பு அவருக்கு பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால், பாவம், கேப்டனாக இருக்கும் போது மட்டுமே அவரது உண்மையான திறமை வெளிப்பட்டது என்பது வருந்தத்தக்கது.” இவ்வாறு பிரையன் லாரா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT