Published : 24 May 2018 05:40 PM
Last Updated : 24 May 2018 05:40 PM
ராயல் லண்டன் ஒன் டே கப் போட்டியில் இந்திய வீரர் செடேஷ்வர் புஜாரா சதம் அடித்தார், ஆனால் அவர் ஆடிய யார்க்ஷயர் அணி வொர்ஸ்டர் ஷயர் அணிக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
லீட்சில் நேற்று நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற யார்க்ஷயர் முதலில் வொர்ஸ்டர் ஷயர் அணியை பேட் செய்ய அழைத்தது. ஆனால் யார்க்ஷயர் அணியை புரட்டி எடுத்தது வொர்ஸ்டர் ஷயர், 6 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்களை மட்டுமே எடுத்தது. ட்ராவிஸ் ஹெட் 77 ரன்களை விளாச, வைட்லி 66 நாட் அவுட். தொடக்க வீரர் ஜேஎம், கிளார்க் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 ரன்கள் விளாசினார். கடைசியில் ஓ.பி.காக்ஸ் என்ற வீரர் 33 பந்துகளீல் 6 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.
351 ரன்கள் இலக்கை விரட்டிய யார்க்ஷயர் அணியில் லித் (29), கோஹ்லர்-காட்மோர் (89) ஆகியோர் நல்ல தொடக்கம் கண்டனர் 11 ஓவர்களில் 72 ரன்களை தொடக்கத்தில் சேர்த்தனர். பிறகு புஜாரா, கோஹ்லருடன் இணைந்து இருவரும் 30வது ஓவரில் ஸ்கோரை 173 ரன்களுக்கு உயர்த்தினர் அப்போது கோஹ்லர் 89 ரன்களில் வெளியேறினார், இவர் இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். 18 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்தனர்.
புஜாரா 3வது தொடர் அரைசதம் கண்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 173/1 என்ற நிலையிலிருந்து 40வது ஓவரில் 240/4 என்று ஆனது யார்க்ஷயர். இதன் பிறகு புஜாரா தனது சதத்தை எட்டினார். 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் புஜாரா 101 ரன்கள் எடுத்தார். ஆனால் 43வது ஓவரின் 5வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
அதன் பிறகு கீழ்வரிசை வீரர்கள் தங்களது அதிரடியில் அருகில் வந்தனர், ஆனாலும் கடைசி ஓவரில் 16 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்றானது ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. 346/9 என்று முடிந்தது யார்க் ஷயர், புஜாராவின் அரிய ஒருநாள் சதம் வீணானது.
இந்த இன்னிங்ஸில் அவர் லெக் திசையில் சில அபாரமான ஷாட்களையும், ஆஃப் திசையில் அவருக்கேயுரிய நேர்மறையான ஷாட்களையும் ஆடியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT