Last Updated : 13 Jul, 2024 08:35 PM

 

Published : 13 Jul 2024 08:35 PM
Last Updated : 13 Jul 2024 08:35 PM

டிஎன்பிஎல்: அனிருத் அரை சதம் துணையுடன் மதுரையை வீழ்த்தியது திருப்பூர் அணி!

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், 2-வது கட்ட லீக் போட்டிகள் இன்று (ஜூலை 13) தொடங்கியது.

இன்று மதியம் தொடங்கிய முதல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணியின் சார்பில், கேப்டன் ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் லோகேஸ்வர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 5 ரன்களாக இருந்த நிலையில் லோகேஸ்வர் 4 ரன்களுக்கு புவனேஸ்வரன் பந்துவீச்சீல் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

‘ஒன்டவுன்’ பேட்ஸ்மேனாக வந்த அஜெய் சேட்டான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 18 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கவுசிக், ஸ்ரீ அபிஷேக் ஜோடியினர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் முறையில் இந்த ஜோடி சேர்த்த நிலையில் 21 ரன்களுக்கு அபிஷேக் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த சசிதேவ் அதிரடியாக ஆடினார். அவர் 19 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. கவுசிக் 18, சுவப்னில் சிங் 17, சரவணன் 6, சதுர்வேதி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் திருப்பூர் அணியின் புவனேஸ்வரன் 3 விக்கெட்டுகளையும், ரோகித், சாய் கிஷோர், மதிவாணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி பேட்டிங்கை தொடர்ந்தனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன், துஷார் ரகேஜா ஆகியோர் நீடிக்கவில்லை. தலா 5 மற்றும் 3 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், அமித் சாத்விக், அனிருத் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் சேர்த்தனர். 51 ரன்கள் ஜோடியாக சேர்ந்த நிலையில், 23 ரன்களுக்கு அமித்சாத்விக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கணேஷ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அனிருத் 28 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் சாய் கிஷோர் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் முகமது அலி 34 ரன்கள்,மதிவாணன் 4 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். ஐட்ரீம் திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x