Published : 12 Jul 2024 05:49 PM
Last Updated : 12 Jul 2024 05:49 PM
லாகூர்: "விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், இந்திய மக்கள் கொடுக்கும் அன்பையும் விருந்தோம்பலையும் மறந்துவிடுவார். இந்திய அணி 2025-ல் பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும்" என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் திட்டமிடப்பட்டு உள்ளதாக சொல்லப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. அரசின் முடிவை ஏற்போம் என சொல்லப்பட்டு வந்த சூழலில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி வசம் பிசிசிஐ கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில்தான் ஷாகித் அப்ரிடி, இந்திய அணியை பாகிஸ்தான் வர வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஷாகித் அப்ரிடி மேலும் கூறுகையில், "இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் விராட் கோலி அதில் கவனம் ஈர்க்கும் வீரராக இருப்பார். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவேற்கிறேன். அதேபோல் பாகிஸ்தான் அணியும் இந்தியா செல்ல வேண்டும். பாகிஸ்தான் அணி சார்பில் நான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோதெல்லாம், இந்தியாவில் எனக்கு மரியாதையும் அதிகமான அன்பும் கிடைத்தது.
அதேபோல், 2005-ல் இந்தியா, பாகிஸ்தான் வந்தபோது, இந்திய வீரர்களும் பாகிஸ்தான் மக்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றனர். இந்திய வீரர்கள் சிறப்பான விருந்தோம்பலை பெற்றனர். அரசியலில் இருந்து விளையாட்டை ஒதுக்கி வைக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் வருவதையும், இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் செல்வதை விட அழகானது என்ன இருக்க முடியும்.
எனக்கு மிகவும் பிடித்த வீரர் விராட் கோலி. என்னைப் போலவே பாகிஸ்தானில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், இந்திய மக்கள் கொடுக்கும் அன்பையும் விருந்தோம்பலையும் மறந்துவிடுவார். அந்த அளவுக்கு பாகிஸ்தானில் அவருக்கு வரவேற்பு இருக்கும். பாகிஸ்தானில் மக்கள் அவரை அதிகம் விரும்புகிறார்கள். வெறித்தனமாக அவரை ரசிக்கிறார்கள். எனவே இந்திய அணி 2025ல் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் வரவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் அணி குறித்து பேசிய ஷாகித் அப்ரிடி, "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தனது தகுதியை நிரூபிக்க பாபர் அஸமுக்கு ஏராளமான வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் என்ன அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறதோ, அதை செய்ய வேண்டும். எனினும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் இணைந்து ஒரு அமைப்பாக செயல்பட நேரம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT