Published : 12 Jul 2024 10:23 AM
Last Updated : 12 Jul 2024 10:23 AM
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிதான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டி. அவர் 700 விக்கெட்டுகளைக் கடந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்டர் என்று கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஆண்டர்சன் கூறியதாவது: சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர் என்றே கூறுவேன். அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியை வகுக்க முடிந்ததாக நான் கருதவில்லை. சச்சின் இறங்கும் போதெல்லாம் நான் நினைப்பது ‘மோசமான பந்துகளை அவருக்கு வீசக்கூடாது’ என்பதைத்தான். ஏனெனில், மோசமான பந்துகளை அவர் அடித்து நொறுக்கி விடுவார். அப்படிப்பட்ட பிளேயர் அவர்.
இந்திய பேட்டிங் வரிசையில் அவர் ஒரு முக்கிய அங்கம். அவர் ஆட்டமிழந்தால் அணி சரிவடையும் காலங்கள் இருந்தது. சச்சினை வீழ்த்தி விட்டால் மைதானத்தில் அனைத்துச் சூழ்நிலையும் மாறிவிடும். அவரது விக்கெட் அத்தனை பெரிய விக்கெட்.
ஆஃப் ஸ்டம்புக்கு மேலே பந்தை தொடர்ந்து வீச வேண்டும். அவர் ஒரு பந்தை மிஸ் செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் இறங்கியவுடன் சில பந்துகளில் அவருக்கு எட்ஜ் எடுக்கும். ஆனால், பொதுவாக நான் அவரை இறங்கியவுடன் எல்ப.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்யவே முயற்சி செய்வேன்.
ஆனால், அவர் எனக்கு எதிராக வெற்றியும் அடைந்திருக்கிறார். எங்களுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்துள்ளார். எனது கரியர் சாதனையாக நான் நினைப்பது இந்தியாவுக்கு எதிராக ட்ரெண்ட் பிரிட்ஜில் பேட்டிங்கில் 81 ரன்களை எடுத்ததையே கருதுகிறேன். விக்கெட் எடுத்ததையோ, சிறந்த பவுலிங்கையோ என்னால் கூற முடியும். ஆனால், அன்று பேட்டிங்கில் 81 ரன்கள் எடுத்தது என்னாலேயே நம்ப முடியாத விஷயம் எனத் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 701 விக்கெட்டுகளில் இந்தியாவுக்கு எதிராக 149 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன், இதில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை 9 முறை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன், இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட சச்சின் டெண்டுல்கர்தான் கடினமான பேட்டர் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT