Published : 12 Jul 2024 09:12 AM
Last Updated : 12 Jul 2024 09:12 AM
ஐபிஎல் பணமழை டி20 ரியால்டி ரக கிரிக்கெட் ஷோவினால் சாதாரணது முதல் சராசரி இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறொரு பயனும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லை என்று ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக கிண்டல் தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டத்தை பரிகசிக்கும் விதமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் ஜெஃப்ரி பாய்காட்.
இது குறித்து ஆங்கில பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக நாம் கண்டதெல்லாம் கரீபியனில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள்தான். இங்கிலாந்து அதில் மிக மோசமாக ஆடியது. இந்தியன் பிரீமியர் லீக் என்ற டி20 ஷோ மூலம் இங்கிலாந்தின் சாதாரண மற்றும் சராசரியான வீரர்கள் பணக்காரர்கள் ஆனதுதான் மிச்சம்.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாகத் தொடங்கி 4-1 என்று இங்கிலாந்து தோல்வி கண்டது. இந்த இந்தியத் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஆணவத்துடன் அகங்காரத்துடனும் ஆடினர். அதாவது ரன்களை விரைவு கதியில் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்துவதே எமக்கு இட்ட பணி என்று ஆடினர். ஆனால் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்று ஒன்று உள்ளது. இவர்கள் ரசிகர்களைக் குஷிப்படுத்தி விட்டு தோற்கிறார்கள், மாறாக இந்தியா வெற்றி பெற்று ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறது.
வெற்றி தோல்வி பார்வையிலிருந்து விலகுதல் கூடாது. தோற்பதில் என்ன வேடிக்கையும் கேளிக்கையும் உள்ளது. டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் என்பது கண்காட்சி கிடையாது. நம் டெஸ்ட் வீரர்கள் ஆட்டத்தின் முடிவு பற்றி கவலையில்லை வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை என்று நினைத்தால் அவர்கள் சர்க்கஸிற்குச் செல்வதுதான் நல்லது, அல்லது யார் வெல்கிறார்கள், தோற்கிறார்கள் என்ற கவலையில்லாமல் ஹார்லெம் க்ளோப்ட்ராட்டர்ஸ் கூடைப்பந்து அணியுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டும் ஜோக் அடித்துக் கொண்டும் இருக்கலாமே.
இவ்வாறு கடுமையாகத் தாக்கியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். பிரெண்டன் மெக்கல்லம்மின் புதிய கொள்கையான ‘பாஸ்பால்’ அதிரடியினால் ஒரு பயனும் இல்லை என்பதை மறைமுகமாகச் சாடியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT