Published : 12 Jul 2024 08:29 AM
Last Updated : 12 Jul 2024 08:29 AM

ஒலிம்பிக் திருவிழாவிற்கு தயாராகும் பாரிஸ்

கோப்புப்படம்

33-வது ஒலிம்பிக் திருவிழா உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலக அளவில் சுற்றுலாவிற்காக அதிகமாக பொது மக்கள் வந்து செல்லும் நகரமாக பாரிஸ் உள்ளது. இதனால் இந்த முறை ஒலிம்பிக் போட்டியை காணவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் திருவிழாவை கோலாகலமாக நடத்துவதற்காக பாரிஸ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் 42 வகையான விளையாட்டு போட்டிகளில், 329 பிரிவுகளில் பதக்கங்களுக்காக களம் இறங்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 113 பிரிவுகளில் 16 வகையான விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய நான்கு விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் வழக்கமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் பாரிஸில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களிலும், தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதிக அளவில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களை கவரும் வகையில் தற்காலிக மைதானங்கள் பாரிஸ் நகரின் முக்கிய அடையாள சின்னங்களான ஈபிள் டவர், கிரான்ட் பேலஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்த உடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.

புதிய முறையில் தொடக்க விழா: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா ஒரு விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற உள்ளது. பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான செய்ன் நதியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தி படகில் 6 கி.மீ தூரம் அணிவகுத்து வர உள்ளனர். இதன் பின்னர் தொடக்க விழாவின் இறுதி நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பாரம்பரிய மிக்க நகரமான பாரிஸ் தனது தனித்துவத்தை இழக்காமல் விளையாட்டு உலகின் உச்சமாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

செய்தி: எஸ்.சத்தியசீலன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x