Published : 11 Jul 2024 04:11 PM
Last Updated : 11 Jul 2024 04:11 PM
சிட்னி: டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
“அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான். புதிய பந்தை கொண்டு பந்து வீசும் போது வேகத்தை கூட்டி வீசுகிறார். போட்டிகளில் விளையாடும் போது அவரது செயல்திறன் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவர் அபாரமான பவுலர்.
அதே போல இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. விரைந்து ரன் சேர்க்கும் ஹிட்டர்களும் அணியில் உள்ளனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் அவர்கள் பொருத்தமானவர்கள்” என பிரெட் லீ தெரிவித்திருந்தார்.
தற்போது உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பிரெட் லீ வழிநடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013-ல் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஐசிசி தொடரில் பட்டம் வென்றுள்ளது. இந்தச் சூழலில் பும்ராவை பிரெட் லீ பாராட்டி உள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அதில் அவரது ஆவரேஜ் 8.26. எக்கானமி ரேட் 4.17.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT