Published : 30 May 2018 03:59 PM
Last Updated : 30 May 2018 03:59 PM

யார் இந்த இயன் சாப்பல்? - கிறிஸ் கெய்ல் காட்டம்

பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும் புகழ் பெற்ற கிறிஸ் கெய்ல் சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர்.

தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும்.

ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் மது அருந்துவேன்” என்றார். இதோடு ‘டோண்ட் ப்ளஷ் பேபி’ (வெட்கப்படாதே பேபி) என்று கூறியதும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பி பிபிஎல் அணியான மெல்பர்ன் ரெனெகேட்ஸ் கெய்லுக்கு 10,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது.

அப்போது கிறிஸ் கெய்ல் மீது கடும் விமர்சனங்களைப் பலரும் வைத்தனர், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய சிறப்பு வரணனையாளருமான இயன் சாப்பல், ‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகம் நெடுகுமே கிறிஸ் கெய்லை ஒப்பந்தம் செய்யக் கூடாது, இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிற கிளப்புகளுக்கும் அறிவுறுத்தினால் மகிழ்ச்சியடைவேன்’ என்றார்.

கெய்ல் பிற்பாடு இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, ‘இது ஒரு ஜோக்தான்’ என்று மழுப்பினார்.

இந்நிலையில் மும்பை மிரர் ஊடகம் கெய்லிடம் இது பற்றி எழுப்பிய கேள்விகளும் பதில்களும்:

கேள்வி:என்னிடம் அகலமான பேட் உள்ளது, ‘வெட்கப்படாதே பெண்ணே’ போன்ற கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கெய்ல்: நான் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன், நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை.

கேள்வி: டோண்ட் ப்ளஷ் பேபி என்று கூறியதன் ஆண்டுவிழாவைக் கொண்டாடினீர்கள் அல்லவா? அது என்ன?

கெய்ல்: எனக்கு அதெல்லாம் நினைவில் இல்லை.

கேள்வி: அந்தச் சம்பவத்துக்குப் பிறகே பெண் பத்திரிகையாளர்கள் உங்களை நேர்காணல் செய்ய பயந்தார்கள் அல்லவா?

கெய்ல்: ஆண்கள் செய்யும் வேலையை பெண்களும் செய்வது நல்லதுதான். பெண்கிரிக்கெட் வீராங்கனைகளிலும் சிறந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஆனால் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

கேள்வி: இயன் சாப்பல் உங்களை தடை செய்ய வேண்டும் என்றாரே?

கெய்ல்: யார் அந்த இயன் சாப்பல்?

கேள்வி: எந்த பவுலரைக் கண்டால் உங்களுக்கு கொஞ்சம் பயம்?

கெய்ல்: எனக்கு பயம் இல்லை, என்னைக்கண்டால்தான் பவுலர்களுக்குப் பயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x