Published : 22 May 2018 08:01 AM
Last Updated : 22 May 2018 08:01 AM
1954-ம் ஆண்டு 5-வது உலகக் கோப்பை தொடர் ஃபிபாவின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடர்தான் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ச்சியாக 27 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத நிலையில் இந்தத் தொடரில் விளையாடிய ஹங்கேரி எதிரணிகளை தனது அசாத்தியமான ஆட்டத்தால் பயமுறுத்தியது.
இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக 4 ஆட்டங்களில் ஹங்கேரி 24 கோல்களை அடித்து அசத்தியது. இதில் மேற்கு ஜெர்மனியை 8-3 என்ற கோல் கணக்கிலும், தென் கொரியாவை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முக்கிய தருணங்களாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் மழை பொழிந்ததில் ஃபெரெக் புஸ்காஸ், சாண்டோர் கோசிஸ், நாண்டோர் ஹைட்கூட்டி, ஜோஸ்ஸெப் போஸ்சிக் உள்ளிட்டோர் முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஹங்கேரிக்கு இறுதி ஆட்டத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. லீக் ஆட்டத்தில் 8 கோல்கள் வாங்கி தோல்வியடைந்திருந்த மேற்கு ஜெர்மனியை இறுதி ஆட்டத்தில் சந்தித்தது ஹங்கேரி. இந்த ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியை எளிதாக ஹங்கேரி வெல்லும் என கருதப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் பரபரப்பான, எதிர்பாராத முடிவை அளித்த ஆட்டம் என்று இப்போது வரை வர்ணிக்கப்படும் இந்த இறுதி ஆட்டத்தில் முதல் 10 நிமிடங்களுக்குள் ஹங்கேரி 2 கோலடித்து முன்னிலை பெற்றது. இரு கோல்கள் அடிக்கப்பட்டதுமே உலகக் கோப்பையை வென்று விட்டது போன்ற மகிழ்ச்சியில் ஹங்கேரி ரசிகர்கள் திளைத்தனர். ஆனால் 10-வது நிமிடத்தில் மேக்ஸ் மோர்லாக்கும், 18-வது நிமிடத்தில் ஹெல்முட் ரஹ்னும் அடித்த கோலால் ஆட்டத்தை சமன் செய்தது மேற்கு ஜெர்மனி. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்கள் இருந்த போது ஹெல்முட் ரஹ்ன் மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார். இதுவே மேற்கு ஜெர்மனி அணியின் வெற்றி கோலாக அமைந்தது. 1950-ல் இருந்து தொடர்ந்து தோல்வியை சந்திக்காமல் இருந்த ஹங்கேரியின் வெற்றிப் பயணமும் அத்துடன் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT