Published : 08 Jul 2024 07:23 AM
Last Updated : 08 Jul 2024 07:23 AM
சென்னை: சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் உள்ள ரெட்டி சுமங்கலி டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிஏ, எம்சிசி, ஐஎன்எஸ்சி, ஐஎஃப்சிஆர், ஜிஎன்எஸ்சி, கோவை, சிடிசிஏ, எம்ஜிசி, எம்ஆர்சி, காஸ்மோ பாலிட்டன் ஆகிய 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடும். வெற்றி பெறும் அணிக்கு நான்கு புள்ளிகள் வழங்கப்படும்.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டி 28-ம் தேதி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டோராகவும், 2 வீரர்கள் 41 முதல் 45 வயதுக்குட்பட்டவராகவும், 2 வீரர்கள் 46 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டுமென போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போட்டியானது தமிழ்நாடு மூத்த வீரர்கள் கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு போட்டியாக நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிஷனில் 4 மற்றும் 5-ல் விளையாடும் வீரர்களும் பங்கேற்கலாம். போட்டியின் தொடக்கநாளில் 10 அணிகளின் கேப்டன்களும் தங்கள் அணியின் நினைவாக மரக்கன்றுகளை நடுகின்றனர்.
இத்தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கத்தின் செயலாளர் வெங்கட் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா, நிர்வாகிகள் பாலாஜி, தர், சுரேஷ்குமார், ரவிசங்கர், பி.எஸ்.ராகவன், திருமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT