Published : 04 Jul 2024 06:04 PM
Last Updated : 04 Jul 2024 06:04 PM

2032 ஒலிம்பிக் இலக்கு: கோவில்பட்டியில் 3 ஆண்டு கால கோல் கீப்பர் பயிற்சி!

கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில்கோல் கீப்பர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான பயிற்சி தொடங்கியது. உலக அரங்கில் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவுக்கு என தனி இடம் உள்ளது. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டில் கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு உலகத் தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஹாக்கி விளையாட்டு விடுதியில் தங்கி இருக்கும் வீரர்களுக்கு தினமும்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,ஆண்டுதோறும் தேசிய ஹாக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்று வருகின்றன. அதே போல், பாண்டவர்மங்கலம், திட்டங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனால் சிறு வயது மாணவர் முதல் வயதானவர்கள் வரை ஹாக்கி ரசிகர்களாக திகழ்கின்றனர்.

கோல் கீப்பர் பயிற்சி: சேலம் மாவட்டம் வேங்கிப்பாளைத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் க.கதிரவன், தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் 9 வயது முதல் 11 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஹாக்கி கோல் கீப்பருக்கான பயிற்சி அளித்து வருகிறார். இவர் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புள்வெளி ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். பயிற்சிக்கு வந்த சுமார் 10 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம்மதிப்பிலான கோல் கீப்பர் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஹாக்கி கோல் கீப்பர்களுக்கு இலவசமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு 3 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். ஹாக்கி விளையாட்டுக்கு சிறந்த இடமான கோவில்பட்டியில் இந்த புதிய முயற்சியை தொடங்கிஉள்ளோம். இந்த திட்டம் 3 ஆண்டுகால திட்டமாகும். சிறு வயது முதல் ஹாக்கி கோல்கீப்பர் பயிற்சி அளித்து, அதற்கான நுணுக்கங்களை கற்றுத் தருகிறோம். இதற்காக 9 வயது முதல் 11 வயது வரையிலான வீரர்களை தேர்வு செய்துள்ளோம்.

2024-ல் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாட்டில் இருந்து எந்த வீரரும் இடம் பெறவில்லை. இதனால் எங்களது இலக்கு 2032-ல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து, கண்டிப்பாக கோவில்பட்டியில் இருந்து வீரர்கள் பங்கு பெற வேண்டும். அதில் ஒரு வீரர் கோல் கீப்பராக இருக்க வேண்டும்,” என்றார்.

இது குறித்து ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் செ.குரு சித்திர சண்முக பாரதி கூறும்போது, ‘‘ சிறு வயது முதலே ஹாக்கி கோல் கீப்பிங் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் நுணுக்கங்களை கற்றுத்தரும் போது அவர்கள் சிறந்த வீரர்களாக உருவாக வாய்ப்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டே இந்த பயிற்சியை கோவில்பட்டியில் தொடங்கி உள்ளோம்.

பள்ளி விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்று, ஆண்டு இறுதி தேர்வு விடுமுறை நாட்கள் என 3 ஆண்டுகள் கோல் கீப்பருக்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை இங்குள்ள ஹாக்கி வீரர்களே அளிப்பார்கள். மாணவர்களின் பயிற்சியை ஆன்லைன் மூலம் பார்த்து, அதில் ஏதேணும் மாற்றம் குறித்தும், கீப்பருக்கு தேவையான ஆலோ சனைகளை கதிரவன் வழங்க உள்ளார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x