Published : 04 Jul 2024 05:05 AM
Last Updated : 04 Jul 2024 05:05 AM
மும்பை: மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் செவ்வாய் கிழமை இரவு பார்படாஸ் விமானநிலையம் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனிவிமானம் (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) அமெரிக்காவின் ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ்சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் இந்திய அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் பார்படாஸில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர்.
சுமார் 16 மணி பயணத்துக்கு பின்னர் அவர்கள்,இன்று காலை 6.20 மணி அளவில் டெல்லி வந்து சேருவார்கள் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்து சேரும் இந்திய அணியினர் காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெறுகின்றனர். இதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் விமானம் வாயிலாக மும்பை வந்து சேருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் வான்கடே மைதானத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர். நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து மைதானம் வரை திறந்த வெளி பஸ்ஸில் இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் ஊர்வலம் செல்ல உள்ளனர்.
தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வான்கடேமைதானத்தில் பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பிசிசிஐ, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஏற்கெனவே அறிவித்த ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்குகிறது. விழாவின் போது டி 20 உலகக் கோப்பை டிராபியை முறைப்படி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பிசிசிஐ-யிடம் வழங்குவார். இந்த டிராபி அடுத்த இரு ஆண்டுகளுக்கு பிசிசிஐ தலைமை அலுவலகத்தை அலங்கரிக்கும்.
இதற்கிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியைகவுரவிக்கும் வெற்றி அணிவகுப்பில் எங்களுடன் சேருங்கள்! எங்களுடன் கொண்டாட ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்துக்கு வாருங்கள். தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’‘ எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘‘இந்த சிறப்பு தருணத்தை ரசிகர்களாகிய உங்கள் அனைவருடனும் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மும்பை மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் வெற்றி அணிவகுப்புடன் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்று தாயகம் திரும்பிய போதும் இதே போன்று திறந்த வெளி பஸ்ஸில் வீரர்கள் ஊர்வலம் வந்தனர். இதேபோன்று தற்போதும் அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT