Published : 02 Jul 2024 04:48 PM
Last Updated : 02 Jul 2024 04:48 PM
மும்பை: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த தொடர் வரும் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமையிலான இந்த தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ளனர். அவர்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்தனர். புயல் காரணமாக அவர்கள் ஜிம்பாப்வே சென்றுள்ள அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்கு மாற்றாக முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்) , ஹர்ஷித் ராணா.
சாய் சுதர்ஷன்: 22 வயதான சாய் சுதர்ஷன், இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அந்த தொடரில் 127 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT