Published : 02 Jul 2024 10:21 AM
Last Updated : 02 Jul 2024 10:21 AM

பெனால்டியை கோட்டைவிட்ட ரொனால்டோ: அழுகையை  உவகையாக மாற்றிய போர்ச்சுகல் வெற்றி!

பெனால்டி வாய்ப்பை மிஸ் செய்த வருத்தத்தில் ரொனால்டோ. அவருக்கு ஆறுதல் சொல்லும் போர்ச்சுகல் வீரர்கள்.

நடப்பு யூரோ கோப்பை 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்று ஆட்டத்தில் நேற்று ஸ்லோவேனியா அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்தது போர்ச்சுகல்.

முழு நேர ஆட்டம் 0-0 என்று கோல் இல்லாத கடினமான ஆட்டமாக முடிந்தது. குறிப்பாக 105-வது நிமிடத்தில் ரொனால்டோ தனக்குக் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவற விட்டார், ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஆப்லாக் அற்புதமாகத் தடுக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோலை அடித்து கண்ணீரை சிரிப்புத் தருணமாக மாற்றினார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா ஸ்லோவேனியா வீரர்களான ஜோசப் இலிசிச், ஜியூர் பால்கோவெச், மற்றும் பெஞ்சமின் வெர்பிக் ஆகியோர் ஷாட்களைத் தடுக்க போர்ச்சுகல் 3-0 என்று வெற்றி பெற்று யூரோ காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் போர்ச்சுகல் அணி நேற்று பெல்ஜியத்தை 1-0 என்று வீழ்த்திய பிரான்ஸ் அணியைச் சந்திக்கிறது.

ஜான் ஆப்லாக் ரொனால்டோவின் பெனால்டி கிக்கை முழு நேர ஆட்டத்தில் பிரில்லியண்டாக சேவ் செய்ய கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோவை போர்ச்சுகல் அணியினர் தேற்ற வேண்டியதாயிற்று. ஸ்லோவேனியா அணி ஒரு பெரிய அதிர்ச்சியை போர்ச்சுகலுக்கு தரவிருந்த தருணமும் கோலாக மாறாமல் தடுக்கப்பட்டதை போர்ச்சுகலின் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

ரொனால்டோவுக்கு தொடர் குடைச்சல்களை தந்த ஆட்டம்: கிறிஸ்டியானோ ரொனால்டோ பெரிய கால்பந்து சர்வதேசத் தொடர்களில் 60 முறை ஃப்ரீ கிக் எடுத்திருக்கிறார். ஆனால், இதில் ஒரே ஒரு முறைதான் கோல் அடித்துள்ளார் என்கின்றன புள்ளி விவரங்கள்.

8-வது நிமிடத்தில் ரொனால்டோ பெனால்டி முறையீடு செய்தார். ஸ்லோவேனியா வீரர் பாக்சிற்குள் இவரை தடுத்த விதம் தவறு என்று முறையிட்டார். ஆனால், பலனில்லை. பிறகு 16-வது நிமிடத்திலும் ஒரு பெனால்டி அப்பீல் செய்தார் ரொனால்டோ. ஆனால், நடுவர் மிகச்சரியாக கிடையாது என்று மறுத்தார்.

31-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ரொனால்டோவின் ஷாட், கோல் போஸ்டுக்கு சில அங்குலங்கள் மேலே வெளியே சென்றது. 36-வது நிமிடத்தில் சில்வாவின் கிராஸ் ஒன்று ரொனால்டோவின் தலைக்கு மேலே கோலுக்கு வெளியே சென்றது. 39-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பை பெற்றார் ரொனால்டோ. ஆனால், அதையும் கோலாக மாற்ற முடியவில்லை.

55-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் உண்மையில் கோலாக மாறாதது ரொனால்டோவின் ஷாட் தவறினால்தான், நேராக கோல்கீப்பர் ஜான் ஆப்லாக் கையில் அடித்தார். 72-வது நிமிடத்தில் இன்னொரு ஃப்ரீ கிக்கை ரொனால்டோ ரசிகர்களிடத்தில் அடித்தார். இதுவும் விரயமானது. 89-வது நிமிடத்தில் மீண்டும் ரொனால்டோ ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஆப்லாக் கையில் நேராக அடித்தார்.

105-வது நிமிடத்தில் ரொனால்டோவின் பெனால்டி கிக்கை ஆப்லாக் தடுத்து விட கண்ணீர், அழுகை. ஆனால், பெனால்டி ஷூட் அவுட்டின் போது அனைவரும் திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க முதல் நழுவலிலிருந்து மீண்டு வராத ரொனால்டோ இந்த முறை கோலாக மாற்றினார்.

முழு நேர ஆட்டத்தில் ஸ்லோவேனியா வீரர் செஸ்கோவின் ஷாட்டை மட்டும் போர்ச்சுகல் கோல் கீப்பர் கோஸ்டா தடுத்திருக்காவிட்டால் போர்ச்சுகல் தோல்விக்கு, வெளியேற்றத்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பொறுப்பேற்க வேண்டியிருந்திருக்கும்.

ரொனால்டோ ஆட்டம் முடிந்த பிறகு கூறிய போது, ‘ஆரம்பத்தில் துன்பம் பிறகு மகிழ்ச்சி’ என்றார். போர்ச்சுகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா, ‘என் வாழ்க்கையின் ஆகச்சிறந்த போட்டியாக இது எனக்கு அமைந்தது’ என்றார். ஆனால், அருமையான ஃபைட் கொடுத்த ஸ்லோவேனியா அணிக்கும் அந்நாட்டு ரசிகர்களுக்கும் இதயம் உடைந்த தருணமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x