Last Updated : 02 Jul, 2024 08:31 AM

 

Published : 02 Jul 2024 08:31 AM
Last Updated : 02 Jul 2024 08:31 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்டதொடரில் இந்திய மகளிர் அணி10 விக்கெட்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷபாலி வர்மா205, ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தில் 84.3 ஓவர்களில் 266 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக மரிஸான் காப் 74, சுனே லஸ் 65 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் ஸ்னே ராணா 8 விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி சர்மா 2 விக்கெட்கள் கைப்பற்றினார். பாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 337 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. அந்த அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது. சுனே லஸ் 109, அன்னேக் போஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

லாரா வோல்வார்ட் 93, மரிஸான் காப் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய லாரா வோல்வார்ட் 259 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் சதம்விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவரது முதல் சதமாக அமைந்தது. மேலும் ஓரேஆண்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி 20 போட்டி ஆகியவற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் லாரா வோல்வார்ட்.

மரிஸான் காப் 31 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்னே ராணா பந்தில் நடையைகட்டினார். நிலைத்து நின்றுவிளையாடிய லாரா வோல்வார்ட் 314 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் எடுத்த நிலையில் ராஜேஷ்வரி கெய்க்வாட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 281 ஆக இருந்தது.

இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. அன்னெரி டெர்க்சன் 5 ரன்களில் பூஜா வஸ்த்ரகர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். துமி செகுகுனே 6 ரன்களில் ராஜேஷ்வரி கெய்க்வாட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். சினலோ ஜாஃப்டா 15 ரன்களில் ஸ்னே ராணாபந்தில் வெளியேறினார். மசபாடா கிளாஸ் 2 ரன்களில் ஷபாலி வர்மா பந்தில் போல்டானார்.

விக்கெட் சரிந்தாலும் மறுநிலையில் நங்கூரம் போன்று விளையாடிய நாடின் டி கிளர்க் 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசிய நிலையில் கடைசி விக்கெட்டாக ராஜேஷ்வரி கெய்க்வாட் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். முடிவில் தென் ஆப்பிரிக்க 154.4 ஓவர்களில் 373 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஸ்னே ராணா, தீப்தி சர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். நாடின் டி கிளர்க்கின் மட்டை வீச்சு காரணமாகவே தென் ஆப்பிரிக்க அணி 337 ரன்களை கடந்து முன்னிலை பெற்றிருந்தது.

37 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 9.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. சுபா சதீஷ் 13, ஷபாலி வர்மா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகியாக ஸ்னே ராணா தேர்வானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x