Published : 01 Jul 2024 04:29 PM
Last Updated : 01 Jul 2024 04:29 PM

குரூப் சுற்றுகளில் கோல் பதிவு செய்யத் தவறிய ரொனால்டோ, மெஸ்ஸி!

ரொனால்டோ, மெஸ்ஸி

சென்னை: நடப்பு யூரோ கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். இருவரும் இந்த தொடர்களின் முதல் சுற்று போட்டிகளில் கோல் பதிவு செய்யவில்லை. இருந்தும் போர்ச்சுகல் அணி 'யூரோ கோப்பை' தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கும், அர்ஜென்டினா அணி 'கோபா அமெரிக்கா' தொடரின் காலிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

ரொனால்டோ: 39 வயதான ரொனால்டோ யூரோ கோப்பையின் குரூப் சுற்றில் கோல் பதிவு செய்யாமல் கடந்துள்ளது இதுவே முதல் முறை. இதில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகளின் கால்பந்து அணிகள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடும். இந்தத் தொடரில் கடந்த 2004 முதல் அவர் விளையாடி வருகிறார். யூரோ கோப்பை அரங்கில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக அறியப்படுகிறார்.

இதுதவிர யூரோ கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடியவர், அதிக நேரம் விளையாடியவர் என பல்வேறு சாதனைகள் அவர் வசம் உள்ளது. நடப்பு யூரோ கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு, துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கு எதிராக போர்ச்சுகல் அணி விளையாடியது. இதில் ஜார்ஜியாவுக்கு எதிராக கோல் எதுவும் பதிவு செய்யாமல் 2-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் ஆட்டத்தை இழந்தது.

செக் குடியரசுடன் 2-1, துருக்கியுடன் 3-0 என கோல் பதிவு செய்தது. இதில் தனது பங்களிப்பாக ரொனால்டோ கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. போர்ச்சுகல் அணியின் இளம் வீரர்களே கோல் பதிவு செய்து அணிக்காக பங்களித்துள்ளனர். கடைசியாக கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு கோல்களை போர்ச்சுகலுக்காக ரொனால்டோ பதிவு செய்திருந்தார்.

மெஸ்ஸி: தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த தேசிய கால்பந்து அணிகள் மட்டுமே கோபா அமெரிக்கா தொடரில் பங்கேற்று விளையாடும். அந்த வகையில் அர்ஜென்டினா, இந்த தொடரில் விளையாடி வருகிறது. அதில் அந்த அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியும் விளையாடி வருகிறார். அவர் நடப்பு கோபா அமெரிக்கா தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. 2011-க்கு பிறகு முதல் முறையாக கோபா அமெரிக்கா தொடரின் குரூப் சுற்றில் அவர் கோல் பதிவு செய்யவில்லை. கனடா, சிலே, பெரு அணிகளுக்கு எதிராக அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.

கனடாவுக்கு எதிரான முதல் போட்டியில் மெஸ்ஸி தனது அணி வீரர் மார்டினெஸ் கோல் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து உதவினார். அதே போல சிலேவுக்கு எதிராக அவரது ஆட்டம் ஈர்க்கும் வகையில் அமைந்தது. அர்ஜென்டினா அணி, வீரர்களை சுழற்சி முறையில் ஆட்டத்தின் போது மாற்றிக் கொண்டே இருந்தது அவர் கோல் பதிவு செய்ய முடியாமல் போனதுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ரொனால்டோ யூரோவிலும், மெஸ்ஸி கோபா அமெரிக்கா தொடரிலும் தங்களது அணிக்காக நாக்-அவுட் சுற்று போட்டியில் கோல் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x